Skip to main content

மாவட்ட (அ) வட்டார இலக்கியக் களஞ்சியம் - உருவாக்கத்தின் தேவை குமரி மாவட்டத்தை முன்வைத்து

முனைவர் சு. செல்வகுமாரன் தமிழ் உதவிப்பேராசிரியர் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) அரசு கலைக் கல்லூரி பரமக்குடி இலக்கியம் எனும் பெரும் நீரோட்டம் இன்று புத்தகம், இதழ்கள், இணைய இதழ்கள், பிளாக்கர், முகநூல் எனும் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக மக்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த தளத்துக்கேற்ப வாசகர்களும் வேறுபட்ட சிந்தனைப் போக்குடையவர்களாக விளங்குகின்றனர். மேலும் நவீன தொழில்நுட்ப வசதி இன்று பெரும்பான்மையோரை படைப்பாளிகளாகவும், விமர்சகராகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தாம் சிந்தித்தவற்றை ஏதோ ஒரு குழுசார்ந்த வாசகத் தளத்திற்கோ, தேவைப்பட்டால் பொது வாசகத்தளத்திற்கோ உடனடியாக கொண்டு சேர்க்கின்ற வாய்ப்பும் அது குறித்த விமர்சனத்தை உடனடியாக பெறுகின்ற வாய்ப்பும் இன்று அதிகமாகவே உள்ளது. அதுபோலவே ஒரு படைப்பாக்கத்தின் ஒரு சில பிரதிகளை மட்டும் அச்சிட்டு வைத்துக்கொண்டு அப்படியே பத்து இருபது நூல்களின் ஆசிரியராகும் வாய்ப்பும் இன்றும் உருவாகியுள்ளது. இங்கு இலக்கிய உருவாக்கத்தின் நோக்கமும், பயன்பாடும், தேவையும் பெருத்த மாற்றத்தை அடைந்துள்ளது. எனவே இலக்கியத்தரத்தின் அளவு கோல்களையும் நாம் மாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். அல்லது இலக்கிய உருவாக்கத்தின் நோக்கம், பயன்பாடு சார்ந்து அவற்றினை நாம் பிரித்தறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இத்தகையதான ஒரு இலக்கியப் போக்கில் நாம் மாவட்ட, வட்டார இலக்கியக் களஞ்சியத்தை உருவாக்குகிறபோது பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியவர்களாக உள்ளோம். இலக்கியக் களஞ்சியங்களை மாவட்டங்கள்தோறும் உருவாக்குவது மிகவும் அவசியமானது. ஏனெனில் வட்டாரத்திற்கு வட்டாரம் மக்களும், நிலமும், சாதியும், மதமும், தொழிலும், மொழியும் பிரச்சனைப்பாடுகளும், கல்விபெற்றவர்கள் விகிதமும், பார்வை முறைகளும் மாறிப் போயுள்ளன. இவற்றின் பொதுப் பின்னணியில் இருந்து ஒரு படைப்பாளியிடம் கிளைத்தெழும் படைப்பிலக்கியங் களின் வடிவமும், கருத்தியலும் கூட வேறுபட்டதாய்தான் அமையும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதுபோக படைப்பாளியின் தனித்த அனுபவங்களும், சிந்தனைப் போக்கும் உளவியல் மனமும் கூட ஒரு படைப்பின் உருவாக்கத்தையும், போக்கினையும் தீர்மானிக்கின்றன. ஆக இது போன்ற நிலையில் இலக்கியங்கள் பெரிதும் வட்டாரம் சார்ந்த தனித்த அடையாளங்களைக் கொண்டே வெளிவருகின்றன எனலாம். நீங்கலாக மாநில, தேசிய, உலக இலக்கிய வாசிப்பும் அவை சார்ந்த பார்வையும், அழகியல், கலை, கோட்பாடு சார்ந்த புரிதலும், அது போலவே ஒட்டுமொத்த மக்கள்சார் வாழ்வியல், பிரபஞ்சம், இயற்கை, அறிவியல், குழந்தைகள் பறவை, விலங்குகளின் உலகம் குறித்த புரிதலும், புனைவுத் திறனும் படைப்பாளியை உலகத்தரம் வாய்ந்த அல்லது உலக நோக்கிலான பொதுமைசார் படைப்புகளையும் படைக்கச் செய்கிறது. இத்தகையதான படைப்பாக்கச் சூழ்நிலையில் மாவட்டம் தோறுமான படைப்பாளிகள், அவர்தம் படைப்புகள், காலம், படைப்புக்களம், அதன் பின்னணி, கருத்தியல், மொழிப் பயன்பாடு, படைப்பின் வகைமை குறித்த தரவுகளைக் கொண்ட ஒரு இலக்கிய களஞ்சியத்தை ஒரு தொகுப்பினை, வரலாற்றை நாம் மாவட்டங்கள்தோறும் பதிவு செய்வது அவசியமாகின்றது. இப்பதிவு ஒரு வட்டாரத்தில் தோன்றியுள்ள ஒட்டுமொத்த படைப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும் படைப்பின் கருத்தியல் மற்றும் படைப்புகள் குறிப்பிட்ட பகுதியில் அதிகம் தோற்றம் கொள்வதற்கும், அல்லது தோற்றம் கொள்ளமைக்கான சமூக, வரலாற்றுக் காரணிகளையும், கலை இலக்கிய உணர்வுகளையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் தேசிய மற்றும் உலகளாவிய இலக்கிய உருவாக்கத்தில் குறிப்பிட்ட வட்டார, மாவட்டத்தின் பங்கு என்ன அதன் தனித்த அடையாளங்கள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளவும், அவற்றோடு ஒப்பு நோக்கி மதிப்பீடு செய்யவும் இத்தொகுப்பு முறை மிகவும் பயனுடையதாகின்றது. மட்டுமல்லாது தனது வரலாற்றை, இலக்கியச் செழுமையினை தாமே தெரிந்து கொள்ளவும் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் கூட இத்தொகுப்புமுறை அல்லது இலக்கியக் களஞ்சிய உருவாக்கம் பெரிதும் பயனுடையதாகின்றது. உலகளாவிய நிலையில் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளிகளுடனான நேர்காணல்களை நாம் வாசிக்கின்ற போது அவர்களின் எழுத்து, மற்றும் எழுதவந்தமைக்கான காரணம் குறித்து கேட்கின்றபோது அவர்களின் பதில்கள் வெவ்வேறு விதமாக அமைவதைக் காணமுடிகிறது. இதற்கான உளவியல் பின்னணி என்ன, இலக்கியக் கொள்கை என்ன, இலக்கிய மானுடவியல் என்ன என்பதான பலவற்றையும் நாம் தெரிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் இவை பயனுடையதாகின்றன. அமெரிக்க எழுத்தாளர் டேவிட் செடரிஸ் தான் எழுத வந்தமை பற்றி குறிப்பிடுகின்றபோது “ஒரு பழக்கம் என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார். (அ.முத்துலிங்கம், வியத்தலும் இலமே, ப - 50) ஆப்ரிக்கநாட்டைச் சார்ந்த மொகமட் நஸீகு அலி எனக்கு சிறுவயது முதலே எதைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை உடனே எழுத்தாக மாற்றிப் பார்க்க ஆசை உண்டாகும்” என்கிறார். (அ.முத்துலிங்கம், வியத்தலும் இலமே, ப-74) இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை குறிப்பிடுகிற போது “ஒருநாள் நான் சிறுவனாய் இருந்தபோது அம்மா சாரி உடுக்கும்போது பக்கத்திலிருந்து கண் எடுக்காமல் பார்த்தேன். இந்தக் காட்சி என் மனத்தைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. அம்மா சாரியை உதறிப் பிரித்தது, ஒரு நுனியை இடையில் சொருகியது, ஒரு சுற்று வந்து பல்லினால் சேலையின் தொங்கலை கடித்துக் கொண்டு இடது கை விரல்களினால் லாவகமாகச் சுருக்கை உண்டாக்கி மடித்து, அதை வயிற்றிலே சொருகியது, கையிலே மீதமிருந்த சேலையை இடது தோளின் மேல் எறிந்தது, எல்லாமே மறக்க முடியாதவை. அந்த ஒரு படிமத்தில் இருந்து பிறந்தது தான் கதை. மீதி எல்லாம் கட்டியது.” (அ.முத்துலிங்கம், வியத்தலும் இலமே, ப - 86) என்கிறார். அமெரிக்க எழுத்தாளர் ரோபையா வூல்ப் ‘சிறுகதையிலோ நாவலிலோ ஒரு முடிவைக் காண்பதற்காக அல்ல எழுதும் பொழுது உண்மையில் கிடைக்கும் அந்த பரவசத்துக்காகத்தான்” என்கிறார் (அ.முத்துலிங்கம், வியத்தலும் இலமே, ப - 189) படைப்பாளியின் இலக்கிய உருவாக்கத்தின் நோக்கமும் அதன் தேவையும் வெவ்வேறாய் இருப்பதை நாம் புரிந்து கொள்ள இவை வகை செய்கின்றன. இத்தகையதான ஒரு புரிதலோடு குமரி மாவட்டத்துக்கான ஒரு இலக்கியக் களஞ்சியத்தை நாம் தொகுக்க முயல்வோமாயின் போது கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் என்பவற்றோடு கே.என். சிவராஜன்பிள்ளை, பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணிம், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார், நவீன எழுத்துக்கள் குறித்த விமர்சகர்களில் குறிப்பித்தக்கவர்களான வேதசகாயகுமார், லெட்சுமி மணிவண்ணன், சு. செல்வகுமாரன் போன்றோர்களின் சிறந்த ஆய்வு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. கவிதைகளைப் பொறுத்தமட்டில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவிராச பண்டிதர் என்று அழைக்கப்படுகின்ற இராம சுப்பிரமணிய நாவலர், திட்டூர் தேசிகர், மகாமதி. செய்குதம்பி பாவலர், ஹெச்.ஜி. ரசூல், என்.டி.ராஜ்குமார், குமாரசெல்வா, லெட்சுமி மணிவண்ணன் உள்ளிட்ட மரபு மற்றும் நவீன கவிஞர்களும் அவர்தம் கவிதைகளும் முதன்மை பெறுகின்றன. புனைவு இலக்கியங்களைப் பொறுத்த மட்டில் சுந்தரராமசாமி, தோப்பில் முகமது மீரான், நீலபத்மநாபன், பொன்னீலன், கார்லோஸ் (தமிழவன்) குமாரசெல்வா, மீரான்மைதீன் போன்றவர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத் தக்கனவாக திகழ்கின்றன. அதுபோலவே இரணியல் கலைத்தோழன், கே.பி. எஸ். ஹமீது, மு. வேலையன் உள்ளிட்டோரின் நாடகப் படைப்புசார் ஆக்கங்களும் என்பதாக மிகப்பெரிய அளவில் இலக்கியப் படைப்பாளிகளையும் அவர்களின் படைப்பு பங்களிப்பினையும் நாம் காணமுடிகிறது. இவை குறித்து பதிவு செய்யும் வண்ணம் பேராசிரியர் கி. நச்சிமுத்து அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் எனது இளம் முனைவர் பட்ட ஆய்வாக குமரிமாவட்ட இலக்கியப் படைப்பாளிகள் எனும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்தேன். அதில் தனது படைப்புகளை (கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்) அச்சில் நூலாக வெளிக்கொணர்ந்தவர்களை மட்டும் எடுத்துக் கொண்டு படைப்பாளியின் பெயர், படைப்பாளியின் புனைபெயர், பிறப்பு, இறப்பு பற்றிய குறிப்புகள், பெற்றோர் பெயர்கள், ஊர், அறிந்த மொழி, செய்த பணி, வசிக்கும் தாலுகா, கற்ற கல்வி ஆகியனவற்றை ஒரு பகுதியாகவும், இப்படைப்பாளிகளின் பொதுவான படைப்புச்சிந்தனை, கருத்தியலை இன்னொரு பகுதியாகவும் கொண்டு ஆய்வேட்டை எழுதியிருந்தேன். அதனை நூலாகவும் வெளியிட்டுள்ளேன். (சு.செல்வகுமாரன், குமரிமாவட்ட இலக்கியப் படைப்பாளிகள், காவ்யா - 2002) நான் ஆய்வு செய்த 2000 மாவது ஆண்டுகளில் சமகால படைப்பாளிகளோடு நடைபெற்ற நேர்காணலில் அவர்களில் பலரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்ட அமைப்போடு தொடர்புடையவர்களாக இருந்ததைப் பார்க்கமுடிந்தது இவர்களில் புதிதாக எழுத்துக்கு வந்திருந்த இளைஞர்களால் வெளிக்கொணரப்பட்ட கவிதை, சிறுகதைகள், பெரிதும் இடதுசாரி சிந்தனை, முற்போக்கு பார்வையுடையதாகவும் நாட்டார் மரபுகளை உள்வாங்கியதாகவும் வெளிவந்திருந்த குறிப்பாக என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் உயர்சாதிய எதிர்ப்பு, நாட்டார் மரபு என்பதோடு குமரி மாவட்டம் கேரள மாநிலத்தோடு தொடர்புடைய வாழ்வினைக் கொண்டிருப்பதனையும் பறை சாற்றுவதாக இருந்த்தைக் காண முடிந்த்து. “அங்ஙத்தே குடும்பத்திற்கு புண்ணியம் கிட்டு மென்று வயிறு நிறைய சோறிட்டு பின்வாசலில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த கொல்லத்திப் பெண்ணை வருத்திப் புணரவைக்க தின்று சுகித்துவிட்டு அடுத்த ஜென்மம் வருவேனென்று பிராமணன் வாழ்த்திச் செல்ல தற்கொலை செய்து கொண்டவள் கொல்லங்கோட்டு அம்மனாய் வந்து குரவையிட்டாடுகின்றாள் நரப்பலி கேட்டு” ( ஒடக்கு, ப - 7). மேலும் ஹெச்.ஜி. ரசூல், ஹாமிம் முஸ்தபாவின் கவிதைகள் நிறுவனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதை பார்க்க முடிந்தது. ‘முருங்கைமரக் கொப்பில் மண்ணெண்ணெய் தெளித்த கொள்ளி ஏந்தி குத்பா முடிந்த பிறகு கவனமாக தீ வைத்தாய் பொசுங்கிய மைக்குட்டிகளை எண்ணி முடியாது நிகழ்ந்தது மைக்குட்டிகளின் மரணம் உயிரின் அடையாளம் ஒன்னெற்றாலும் யாரும் தொழுவதில்லை மைக்குட்டிகளுக்காக ஜனாஸா தொழுகை” (மைலாஞ்சி, ப - 79) அது போலவே அன்பின் செபா எனும் அ. செபஸ்டியன், ஜெ. நிர்மல் தம்பி உள்ளிட்ட பல கவிஞர்கள் கிறிஸ்த்தவத்துக்குள் இருந்தபடியே நிறுவனப்படுத்தப்பட்ட கிறித்தவத்தை எதிர்க்கின்ற குரல்களை ஒலிக்கச்செய்தனர். இவை வட்டாரம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய முக்கியமான கவிதைகளாகும் நிர்மல் தம்பியின் கவிதை ஒன்று இப்படி பேசுகிறது. “இம்மூட்டு ரூபா செலவு செஞ்சு கன் வென்சன் வைக்கிறீங்களே ஏதாவது ஸ்கூல்.. காலேஜ்.. வச்சு பத்து பேருக்கு வேல கொடுக்கலமில்ல இல்லன்னா ஏழைகளுக்கு ஏதெங்கிலும் செய்யலாமில்ல அது சரி அப்படி கொடுத்தால் நாளை எங்க கதி” (கடுப்பு, ப - 12) இதற்கு மாறாக இயல்பான நிலையில் இறை சார்ந்து பேசுகின்ற படைப்புகளும் நிரம்பவே வெளிவந்துள்ளன. குறிப்பாக தேவசகாயத்தின் பெருமை பேசும் அந்தோணி முத்துவின் கவிதைகள், இறையின் இயல்பை சொல்லும் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூரின் கவிதைகள், இந்து சமய தெய்வங்கள், வள்ளலார்; குறித்து பேசும் பொன் அரிகிருஷ்ணன், செ.சதாசிவம் கவிதைகள், வைகுண்ட சுவாமியின் பெருமையை எடுத்துரைக்கும் நா.இராமசுந்தரத்தின் கவிதைகள் என ஏராளம் அணிவகுக்கின்றன. ஆக வட்டாரம் சார்ந்து நிறுவன சமயங்களை, நாட்டார் சமயத்தை, ஆதரித்தும் விமர்சித்துமாக ஏராளமான படைப்புகள் வெளிவந்துள்ளதை குமரிமாவட்ட படைப்புகளின் தனித்த அடையாளமாக கொள்ள முடியும். சதாசிவம் தனது கவிதையில் இப்படியாகப் பாடுகிறார். “பக்தி நீர் இல்லாத பாறையாம் அகத்தடத்தில் மெத்தெனும் உன் அடிக்கமலம் மேவி மலர்ந்திடுமோ… (குமரிமாவட்ட இலக்கியப் படைப்பாளிகள், ப -63) என்றும், இன்னொரு கவிதையில் குருபக்தியை பறை சாற்றுவதை கவிதையின் போக்காக பார்க்க முடிகின்றது. “கள்ளுறு களிப்பு நீங்கிக் காலினில் வீழ்ந்த என்னைத் தள்ளிடா தணைத்துக் கொண்டு சற்குரு சாஸ்தாங்குட்டிப் பிள்ளையா வடிவம் தாங்கிப் பெருகறி வூட்டி நின்றான் தெள்ளுறு தமிழில் தேற்றிச் செந்திழாசான் ஆக்க…” (என்கதை, ப - 63) சமூக அவலத்தைப் பாடிய பா. ஜீவானந்தத்தின் கவிதைகளும் தமிழ்ச் சூழலில் முக்கியமான இடத்தைப் பெறுவது கவனத்திற்குரியதாகும். “பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன் பட்டினி யழுகை கேட்பதில்லை இச்சையுடன் பாலை சாமிக்கென்றே - கல்லில் இட்டு வணங்குகிறார் முத்திக்கென்றே…” என்றும் “நானோர் தொழிலாளி - ஒரு நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை ஏனோ புவிவாழ்வு… ” (குமரிமாவட்ட இலக்கியப் படைப்பாளிகள், ப - 105) என்னும் கவிதைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். காதலைப் பாடிய இ. ஹரிகரனின் கவிதை, “உன் காதல் பயணத்தின் ஒவ்வொரு மைல் கல்லிலும் ஒரு இளைஞனின் சடலம் புதைக்கப்பட்டிருக்கிறது” (இராணுவப் பூக்கள், ப - 18) எனும் வரிகள் மூலம் இன்றைய பெண்களின் முரண்பாடான செயல்களை அறிவுறுத்துகின்றார் இன்னொரு கவிதையில் , “ஆனால் ஊர் பேர் தெரியாத ஒருத்தி சிரித்துவிட்டுப் போனதற்காக உயிரைப் பகைத்துக் கொள்வதில் என்ன சார் இருக்கிறது “ (இராணுவப் பூக்கள், ப - 18) இளைஞர்களை சிந்திக்கவைக்கின்ற சொல்லாட்சிகளாகும். இவை போக பனைமரம் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருள் தயாரிக்கும் தொழில் நுட்பங்களை, கயிறு திரித்தல் தொடர்பான தொழில் நுட்பங்களைச் சொல்லக் கூடிய எனது கவிதைகள், “……………………………………… கழிந்த பருவத்தில் மண்பானையில் வாழங்கொத்து புளிகளை அடுக்கி கூப்பனி ஊற்றி வைத்திருப்பாள் பாட்டி. கற்கண்டாய் மாற இன்னும் சில மாதங்கள் ஆகும் பாட்டிக்குத் தெரியாமல் சற்றே உண்டுவா. அப்போது தித்திப்பின் முழுமை உமக்கு புரியும். பனம் பழம் ஒன்றும் தருகிறேன் வெந்தணலில் போட்டு சுட்டு சாப்பிடும் தேனாய் தித்திக்கும். தின்றதும் கொட்டைதானே என்று வீசிவிடாதீர் கொட்டையை புதைத்துவிடும். நான் பனங்கிழங்காய் மறுபடியும் உம்மிடத்தில். கிழங்கை கிள்ளிவிடவில்லையாயின் வடலியாகி பனையாய் வளர்ந்து நிற்பேன். கவிதை போலவே அழகாய் உயரமாய். காவோலைகளையும் கழித்து விடாதீர் குடிசையாய் உறைவிடம் தருவேன். ஓற்றை இலக்கு தானே என்று உதறிவிடாதீர் குறளும் இலக்கணமும் காப்பியமும் குடி கொண்டிருந்தது என்னிடமல்லவா….” (கூந்தல் வண்டி, ப – 63) அத்துடன், வண்ணார், சமூகத்தினர் துணி வெளுக்கப் பயன்படுத்தக் கூடிய உவர்மண், உள்ளிட்டவை குறித்து பேசும் நட. சிவகுமாரின் கவிதைகள் என்பவை வட்டார மண்சார்ந்த பதிவுகளாக விளங்குகின்றன. இவை எல்லாம் வட்டாரரீதியாக நாம் படைப்புகளை தொகுக்கின்ற போதும் பகுக்கின்ற போதுமே அடையாளம் காணவும், உலகளாவிய நிலையில் ஒப்பிட்டு பார்க்கவும் வகைசெய்கின்றன. புனைவெழுத்துக் களிலும் இவை சார்ந்த பதிவுகளை நாம் காணலாம். புதினம் போன்றவற்றின் போக்கு பரந்து விரிந்ததளத்தில் சுந்தரராமசாமி, பொன்னீலன், ஜெயமோகன் போன்றவர்களால் எடுத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது. இவர்களின் புதின எழுத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர்களையும் குமரி மாவட்டத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்த முக்கியமான படைப்புகளாக இனங்காணச் செய்தவை. மேலும் குமரி மாவட்ட இஸ்லாமிய மக்களின் உலகை சித்தரிக்கும் தோப்பில் முகமது மீரானின் படைப்புகளும் முதன்மையானவையாகும். வெளிநாடு செல்லும் கனவுகள், அதன் உள்ளிருக்கும் சிக்கல்களைக் காட்டும் மீரான் மைதீனின் ரோசம்மா பீவி, கவர்னர் பெத்தா படைப்புகளும், மார்த்தாண்டம் பகுதி வட்டாரம் சார்ந்த குமாரசெல்வாவின் சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். கட்டுரை (அ) ஆய்வு நூல்களைப் பொறுத்தமட்டில் டபிள்யு. எட்வினின் சிதைவுகள் பேசும் அழிந்து வரும் கற்கோட்டைகள், நான்காயிரம் குளங்கள், இரணியல் அரண்மனை, கைதிகளால் கட்டப்பட்ட பேராலயம், முட்டிடிச்சான் பாறை, முந்திரிஆலைத் தொழிலாளார்கள் பரிதவிப்பு, தெற்கேகொட்டாரம், மீட்கப்பட்ட மகாதேவர் கோவில், சர்வதேசசந்தைகளை கலக்கும் பனைஓலை, என்பதான கட்டுரைகள், குமரியின் வரலாற்றுக் களஞ்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள் ளமையும் கவனத்திற்குரியனவாகும். ஆக இவைகளை நாம் முறையாக அறியவும், ஒப்பு நோக்கி மதிப்பீடு செய்யவும் குமரிமாவட்ட இலக்கியக் களஞ்சியத்தை நாம் தயார் செய்வது எத்தகைய அவசியம் என்பதை உணரலாம். மேலும் குமரி மாவட்ட இலக்கிய பங்களிப்பில் இலக்கிய இதழ்கள், மலர்களின் பங்களிப்பும் கணிசமானவையாகும். அது போல மலையாள இலக்கியப் படைப்பாக்கங்கள், ஓலைச்சுவடிகளின் பங்களிப்புகள், கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகை எழுத்தாளர்கள் என்பதோடு அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைப் போல வானொலி, தொலைக்காட்சிகளை மையமாக வைத்து இயங்கக் கூடியவர்கள் எனவும் விரிவாகப் பார்க்க முடியும். இவை குறித்து எனது நூல் வெளிவந்த சமகாலத்தில் வெளிவந்த ஆய்வாளர் பென்னி என்ற ஸிங்ஜியின் “குமரி மாவட்ட எழுத்தாளர்கள் யார்? எவர்?” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் இவர் 1081 எழுத்தாளர்களையும், 5539 நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இதில் பத்து பக்க அளவில் வந்த மிகச்சிறிய பக்தி நூலினைக் கூட பதிவு செய்திருக்கிறதைக் காணலாம். பென்னி அவர்கள் தனது நூலில் கதம்பம் எனும் தலைப்பின் கீழ் கொண்டுவரும் “குமரி தந்த முதல் நூல், மலர்கள் பலவிதம், தொகுப்பு நூல்கள், கிறிஸ்தவ வெளியீடுகள், ஓலைச்சுவடிகள் சில, ஆசியவியல் வெளியீடுகள்” (ஸிங்ஜி, குமரி மாவட்ட எழுத்தாளர்கள் யார்? எவர்?, ப - 251) என்பனவும், மேலும் விவேகானந்த கேந்திர வெளியீடுகள், அரசு வெளியீடுகள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், மேனாட்டார் நூல்கள், சிறப்பிதழ்கள் என்பதானப் பதிவுகள் எப்படி நாம் ஒரு இலக்கியக் களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான சான்றாக நம் முன் நிற்கின்றன. மேலும் கன்னியாகுமாரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் வாழ்க்கைக் குறிப்பு, புலவர் குமரேசனின் குமரி மாவட்டப் புலவர்கள், தே. ப. பெருமாளின் குமரி மாவட்டக் கவிஞர்களும் கவிதைகளும், புலவர் கு. பச்சைமாலின் நூற்றாண்டு தமிழ்ச் சாதனை (சிறப்பு மலர்) கன்னிய குமரி மாவட்ட நாடக வரலாறு போன்றவற்றை நாம் மூல நூல்களாகக் கொண்டு குமரி மாவட்ட இலக்கியக்களஞ்சியத்தை தயார் செய்யின் அதன் பயன் அளவிடற்கரியது. அவை வட்டார இலக்கியப் போக்கினை, அதன் சிறப்பினை, வட்டாரம் சார்ந்த உள்முரண்களை எல்லாம் இனங்காட்டுவதோடு தமிழ் இலக்கியப் போக்கோடு ஒப்பிட்டு அதன் உயர்வு தாழ்வினையும் அடையாளப்படுத்துவதாய் அமைந்திடும்.

Comments

Popular posts from this blog

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

விளிம்புநிலை வாசிப்பு நோக்கில் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் சு.செல்வகுமாரன்

முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின...

மௌனம்

எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய் சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய விட்டில் பூச்சியின் அவஸ்தையாய் நிகழ்ந்திருந்தது உனது மரணம் விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில் கண் இமைகளுக்குள் சிறகசைத்துப் பறந்து கொண்டிருக்கிறாய் நீ ஓவியக்காரனின் தூரிகையாய் மீளவும் மீளவுமாய் நனைந்தபடி கொலைக்காரர்களின் மனங்களைப் போல அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது