முன்னுரை
“தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது.
விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின் கீழ் வருவோர்.” (https://figshare.com/s/9506 cf6a3d43625f8123) என்பதும் இங்கு சிந்தனைக்குரியதாகிறது. இ.எம்.எஸ். கலைவாணனால் எழுதப்பட்ட “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” (2015) தொகுப்பு இங்கு விளிம்பு நிலை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கலைவாணன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இடது சாரி இயக்கங்களோடு இணைந்து செயலாற்றி வருபவர்.
ஒரு படைப்பை பொது நிலையில் வாசித்தல் மற்றும் மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் என இன்று கோட்பாட்டு, அரசியல் நிலைகளில் வாசிக்கப்படுவதும் கவனத்திற்குரியது. அந்த வகையில் “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” ஒரு காலத்தில் இடைநிலை சாதி மக்களின் மருத்துவர்களாக அம்மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த நாவிதர்கள் எப்படி காலந்தோறும் சாதிய சமூகத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர். ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தனர், இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி, அவமானம் என்பன கவிதை எங்கும் எங்ஙனம் பரவிக்கிடக்கிறது என்பதை விளிம்பு நிலை நோக்கில் வாசிப்புக்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் கலைவாணன் வாழ்ந்த நிலத்தின் இடைநிலை சாதி மக்களான நாயர், ஆசாரி, செட்டியார், நாடார்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளுக்கும் நாவிதர் சமூகத்துக்கும் இருந்து வந்த இயங்கியல் சார்ந்த பெருந்தொடர்பும் கவிதை எங்கும் சங்கிலிப் பாசியாய் படர்ந்து கிடப்பதை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
மேலும், நாடகம், நடிப்பு, கதை, இயக்கம், சிலம்பம், முடிதிருத்துதல், மேளம், நாதஸ்வரம் என கலைகளும் அறிவுத்தளமும் இவர்களின் காலடியில் தவம் கிடந்திருப்பதையும் இவரின் கவிதைப் பரப்பெங்கும் காண முடிகிறது. ஆக, இத்தகைய பேராண்மை உடைய ஒரு சமூகம் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்த ஒரு கறுப்பு வரலாற்றை பதிவு செய்வதாகவும், கேள்வி கேட்பதாகவுமே இக் கட்டுரை அமைகின்றது.
கலைவாணன் இத்தொகுப்பிற்கான முன்னுரையாக ஒரு கவிதையை முன்வைத்திருக்கின்றார். அதுவே இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
“குனிந்திருந்து / கீழ் பார்த்து தொங்கும் / கொட்டை மயிருகளை
அரை குறையாக / வெட்டித் தள்ளுவது போல் / அல்லாமல்.
கண்ணாடியில் முகம் பார்த்து / கம்பீரமான முறுக்கு மீசை
மேல் நோக்கி நிற்பதற்கு / கத்தரிப்பது போல்
உங்கள் கவனத்தை / வேண்டி நிற்கிறது / இப்பதிவு.” (ஒ.ச.க.ம, ப – 13)
மேலும்,
“பண்டிதன் / முண்டிதன் / இங்கிதன் / சங்கிதன்
நால்விதம் தெரிந்தவனே / நாவிதன்
வேறு எவனுக்கும் / இல்லை இவை.” (ஒ.ச.க.ம, ப - 14)
எனும் முதல் கவிதை நாவிதர் சமூகத்தின் அடையாளம் குறித்த ஒரு பொதுப் புரிதலை வாசகனிடத்தில் ஏற்படுத்த முனைகிறது. இக்கவிதையில் இருந்தே அவர்கள் குறித்தறிய கலைவாணனின் பிறக் கவிதைக்குள் நாம் பயணிப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நாவிதர் சமூகம் – ஒடுக்குதலுக்குள்ளாதல்
ஆரம்ப காலத்தில் நம் வாழ்வின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த தபால்காரனைப் போலவே இடைநிலைச் சாதிய, சமூகத்தோடு சகப் பயணியாக பயணித்தவன் நாவிதனும், வண்ணானும். முதல் கவிதை குறிப்பிடுவது போலவே நாவிதன் நாலும் தெரிந்தவனாக இருந்துள்ளான். அப்படிப்பட்ட ஒருவன் எப்படி சமூக அமைப்பில் கீழானவனாகக் கொண்டு வரப்பட்டான் என எண்ணுகிற போது அது வியப்பினும் வியப்பாகவே இருக்கின்றது. ஒவ்வொரு நிலப்பரப்பிலும் பெரும்பான்மைக் குழுவினராக இருந்து வந்த ஏதோ ஒருசில இடைநிலைச் சாதியினிடையே இந்த சமூகத்தினர் மிகவும் சிறுபான்மையினராக இருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது இவர்கள் ஈடுபட்டு வந்த வாழ்க்கை வட்டச்சடங்குகளில் குறிப்பாக இறப்புச் சடங்கில் பிணத்தைக் கையாளுதல் மற்றும் முடிவெட்டுதலும் பிறக் காரணிகளாக இருக்கலாம் என்பதாகவும் எண்ணிப் பார்க்க முடிகிறது.
சமூக வாழ்வில் சக மனிதனாக, சகப் பணியாளனாக கருதி உரிய மதிப்போடு நடத்தபட்டிருக்க வேண்டிய நாவித சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிய சமூகத்தினரால் தொடர்ந்து சுரண்டப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வந்ததனால் அவர்கள் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கும் உளவியல் தாக்கத்தின் பிரதிபலிப்பாகவே கலைவாணனின் கவிதை இயங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“களை கட்டியிருந்தது / பிச்சாண்டி ஆசாரியின் / கல்யாணவீடு.
முதல் பந்தியில் / பக்கத்து கோவிந்தன் நாயர் / இலைக்கு பருப்பு வந்தது.
இப்பவே யாம்புல இருந்தியன்னு / சோறு விளம்புன ஞானப் பிறகாசம்
ஓடுங்கல நாசுவத் தாயளியன்னு / எழுப்பி விட்டான்
என்னையும் என் அம்மையையும்.
எல்லா விஷேச வீட்டுலயும் / ஒரு ஞானப் பிறகாசம் இருப்பான்
எங்களை / விரட்டி விடுறதுக்கு” (ஒ.ச.க.ம, ப – 18)
எனும் வரி வலியின் உச்சபட்சமாக உணரக் கூடியதாக உள்ளது. இது சார்ந்த கருத்தை இன்னொருக் கவிதையில் எழுதும் கலைவாணன்,
“பாண்டியனுக்க / பழக்கடையில வச்சு.
நான் பழம் வாங்குக / கடையில தான்
நாசுவ பயலுக்கும் பழம் வாங்கணுமான்னு
அக்கானி குமாரதாசு / கேட்டதுனால.
வாழைப்பழ குலைய / தூக்கி அடிச்சான்
புலிப்பனம் வெள்ளை குமாரு.” (ஒ.ச.க.ம, ப – 24)
என்று தன் அவமானப்படுத்தலுக்கான எதிர்ப்பை பதிவு செய்கின்றார். இங்கு தலித்தியச் சிந்தனையாளர் உஞ்சைராசன் “தலித் இலக்கியத்தின் நோக்கம், தலித் விடுதலையை மையப்படுத்துவது. அதற்கானச் செயல், விடுதலைப் போர்க்களம். தலித் விடுதலைப் போராளிகளால் மட்டுமே தலித் இலக்கியம் படைக்க முடியும் என்றும், மட்டுமின்றி தலித் இலக்கியம் ஒரு வகையில் சீண்டுவதும் தூண்டுவதுமாய் அமைய வேண்டும்” (சமகால நாவல்களில் புனைவின் அரசியல், ப-53) என்று குறிப்பிடும் கருத்து நிலை ஒப்பு நோக்கத்தக்கது. மேலும், கவிதையில் வரும் குமார், போலீசுக்குப் போயும் பயனில்லாததால் அரேபியாவுக்குச் சென்று பணம் சம்பாதித்து வருகிறான். வந்து கார் வாங்குவதோடு ஒரு ஹோட்டலும் வைக்கின்றான். எனினும், இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் அவன் அங்கிகரிக்கப்படவில்லை என்பதைக் கலைவாணன் இப்படி எழுதுகிறார்.
“அன்னா / இட்லி தி்ன்னுட்டுப் போற / வேலப்பன் / சொல்லிட்டுப் போறான்
நாசுவனுக்க சட்னியில / அஞ்சாறு மயிரு கிடக்குன்னு.
நீக்கம்புல போவ / இனியும் எத்தனை பேரல
வாழைக்குலைய தூக்கி அடிக்கணும்” (ஒ.ச.க.ம, ப – 24)
என்று மீண்டும் தன் எதிர்ப்பை பதிவு செய்யும் அதேவேளை, பொருளாதாரத்தை விட சாதி வலுவாக இருப்பதும் உணர்த்தப்படுகிறது.
ஒடுக்குதலும் - மேல் நிலையாக்கமும்
படிநிலை சாதிய அமைப்பில் தொடர்ந்து பல சாதிய சமூகங்கள் தீவிரமான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களை அடையாளப்படுத்துகின்ற சாதிப் பெயரே அவர்களை வாழ வழியின்றி துரத்தியடிக்கின்றன. அதிலிருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கு எடுக்கின்ற தற்காப்பு முயற்சியாக தம்மை மேட்டிமைப்படுத்திக் கொள்ளுதல் அல்லது மேல்நிலையாக்கம் செய்து கொள்கின்றனர். இவை சார்ந்த கவிதைகளையும் கலைவாணன் முன்னெடுத்திருப்பதைக் காணமுடிகிறது.
“நாகர் கோவிலில் / கொஞ்சம் பேருக்கு
நானும் / நாடானாக நடிக்கிறேன்” (ஒ.ச.க.ம, ப – 35)
எனக்கவிஞரே ஓரிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும்,
“வீட்டு முன் வாசலில் / ஒத்தவிளக்கு தொங்கவிட்டு / சாயங்காலம்
ராம ராம ராம ராம / ராம ராம பாகிமா பஜனை பாடி
செற்று முண்டு ஸாரி உடுத்து / விளக்குத் தல நாசுவத்திகளெல்லாம்
நாயராயிட்டாளுக” (ஒ.ச.க.ம, ப – 37)
எனும் கவிதையும் கூட மேல்நிலையாக்க கவிதையாகவே அமைவதைக் காண முடிகின்றது. மேட்டிமை சார்ந்து பேசும் இன்னொரு கவிதை திருவனந்தபுரத்துல திவாகரன் நாயர் தெருவுக்குள்ள ரேவதி அக்காவுக்க வீடு. மக கல்யாணத்துக்கு காடு கொடுக்கப் போயிருந்தேன்.
“மருமகனுக்கு / பாபர் ஷாப்புல / வேலைன்னு சொன்னதும்.
வாயப் பொத்தி / காப்பி தந்து / பஸ் ஏத்தி விட்டுட்டா / என்னை.
அவ அங்க / ஒரிஜினல் நாயராம்” (ஒ.ச.க.ம, ப -64)
என்பதும் மிக முக்கியமானக் கவிதையாக விளங்குகின்றன.
இன்னொரு கவிதையில் அடுத்த மாதம் அக்கா மகனுக்கு மெட்ராசுல கல்யாணம். அவா நாயக்கரு வீட்டுல பொண்ணு எடுத்திருக்கா. ஊருல இருந்து வரும் ஓட்டை வாயர் விஜயன் சித்தப்பா, பொண்ணு வீட்டுக்காரன் கிட்ட எதையாவது சொல்லிடக் கூடாதுண்ணி ஊருபட்ட சாமிய எல்லாம் அக்கா கும்பிடுகிறாள் எனச் சொல்லும் கவிதையை இறுதியாக இப்படி முடிக்கிறார்.
“அக்காளுக்கு / இப்ப இருக்கது.
இரண்டாவது மாப்பிள்ளைன்னு / சொல்லட்டு.
அவ அம்மைக்கு / ஆயிரம் மாப்பிள்ளைன்னு / சொல்லட்டு.
அவளுக்க தம்பி பொண்டாட்டி / ஓடி போயிட்டான்னு / சொல்லட்டு.
அவ நாசுவத்தின்னு மட்டும் / சொல்லாம இருந்தா போதும்” (ஒ.ச.க.ம,ப–26)
எனும் வரிகள் சமூகப் பண்பாட்டுத்தளத்தில் தவறாக அல்லது ஒழுங்கீனமாகக் உணரப்படும் நிகழ்வுகள் ஒரு குடும்பத்தில் நடந்திருந்தால் கூட அதனை அங்கிகரித்துக் கொள்கின்ற ஆதிக்கச் சாதியினர், குறிப்பிட்ட ஒரு சாதியினரை தாழ்த்தப்பட்டவர்களாக உணரும் பொழுதில் அவர்களை அங்கிகரிக்க மறுக்கின்ற அவலத்தை உணர்த்துகின்றது. எனவேதான் விளிம்பு நிலைக்குள்ளாகும் மக்கள் தம்மை, சாதகமான பல இடங்களில் மேல்நிலைச் சாதிய சமூகத்தினராக காட்டிக் கொள்ள முயல்வதைப் பார்க்க முடிகிறது. பொதுவாகவே கலைவாணனின் கவிதை மொழியை வாசிக்கிற போது “தலித் இலக்கியத்தின் மொழியானது ஒரு வகை கச்சாத்தன்மையோடு பகடி செய்யும் மொழியாக இருக்கிறது.” (தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள்- ப-53) என்னும் சரண்குமார் லிம்பாலேயின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. இது குறித்து நுட்பமாகப் பேசுவதானால் நான் பார்த்த வரையில் தலித் இலக்கியம் மட்டுமல்ல தலித் அரசியல் எழுச்சிக்குப் பின்னால் உயர்சாதியைினரை எதிர் கொள்ளும் ஒவ்வொரு தலித்தின் குரலில் கூட இந்த நையாண்டியை நாம் உணரமுடியும் என்பதும் பதிவுக்குரியது.
நாவிதர்களும் - அறிவுத்துறையும்
தமிழர்கள் மிகப்பெரிய அளவிலான அறிவு மரபுக்கு சொந்தமானவர்கள் என்பதைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன. அறிவுத்தளத்தின் முகமான சிந்தனை மரபு பற்றிக் குறிப்பிடும் சி.மகேந்திரன், “இந்தியச் சிந்தனை மரபு வேதத்திற்கு முந்தியது. ஆரியர் அல்லாது இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களுக்கு சொந்தமானது.” என்பார். (அறிவு பற்றிய தமிழரின் அறிவு, பக் -224) நாவிதர்கள் நாலாவிதமான அறிவுத்திறன் உடையவர்கள் என்பதை இந்த பூர்வக்குடி மக்களின் சிந்தனை மரபாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது. இதை பிரதிபலிப்பதாகவும் பலக்கவிதைகள் விளங்குகின்றன. ஒரு கவிதையில் இவர்கள் சிலம்பக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களாக இருப்பதை பதிவு செய்கின்ற போது,
“நொங்கு / கருப்பட்டி புளி / வருக்கச்சக்க மாம்பழம் / கொண்டு வந்து.
ஓய் ஆசானேன்னு / விளிச்சு / சாராயம் ஊத்தி கொடுத்து
ஒத்த கம்பு இரட்டைக் கம்பு / தீப்பந்தம் சுருட்டுவாளு / கடாரி சிலம்பம்
நாட்டுஅடவு வர்மம் / அவன் அம்மைக்க அடியந்திரம்.
எல்லா கொண்டாட்டத்தையும் / படிச்சிட்டு.
வீட்டு உள்வழியா / சிவப்புகலர் நிக்கர் தெரிய
தொடை தட்டி நடந்து போவானுக / அஞ்சாறு கறுத்த சிஷ்ய பயலுக”
(ஒ.ச.க.ம, ப – 45)
என்கிறார். இன்னொரு கவிதையில், கவிஞரின் அம்மாவே ஊரின் மருத்துவச்சியாகத் திகழ்ந்ததை,
“ஊரு மருத்துவச்சியாக / அம்மா பிரசவம் பார்த்து.
பூச்சு பறக்கிப் போட்ட / எல்லா குண்டாந்திரங்களும்.
இப்ப வளர்ந்து / ஆளுக்கொரு பனை மரத்துல
பூதங்களா தொங்குது” (ஒ.ச.க.ம, ப – 25)
என்று அடையாளப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் ஒரு நாடகத்தின் பல்வேறுக் கூறுகளை வரிசைப்படுத்தி விவரணப்படுத்துகையில், கதை வசனம், டையரக்சன், பாபர்ஷாப் சங்கரன் எனக் குறிப்பிடுகிறார். அதுபோல சபரிமலை போய்ட்டு சப்பிப்போட்ட பனங்கொட்டை மாதிரி தலைமுடியும் தாடியுமாய் வந்த தங்கப்பன் நாயரை நாற்காலியில் இருத்தி முடிதிருத்தம் செய்யும் கவிதை ஒன்று.
“முன்னால கொஞ்சம் முடிவிட்டு / சைடெல்லாம் பொடியா வெட்டி.
சவரம் பண்ணி மீசை ஒதுக்கி / மூக்கு காது முடிவெட்டி
முகத்துல தண்ணியடிச்சு / சீனக்காரம் தடவி
குட்டிக் குரா பவுடரும் / ஸ்னோவும் போட்டு.
எழுப்பி நிறுத்தி / அக்குளும் வழிச்ச பொறவு” (ஒ.ச.க.ம, ப – 22)
என்பதாக எழுதிச் செல்வதன் மூலம் அழகியலை காட்சிப்படுத்துகிறது. இவை யாவுமே இவர்களை மரபார்ந்த அறிவு, கலைத்துறை சார்ந்தவர்களாக அடையாளப்படுத்திப் பார்க்க இடமளிக்கின்றது.
எதிர்ப்பை வெளிப்படுத்துதல்
இடைநிலை, உயர்சாதிய மக்களின் ஒடுக்குதல் மூலம் விளிம்பை நோக்கி நகர்த்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கிளப்புவதும், அவற்றை எதிர்கொள்ள துணிவதும் கூட தலித் அரசியலின் ஒரு அம்சம்தான். இது போன்ற கவிதைகளும் கலைவாணனின் கவிதை எழுத்தில் நிரம்பக் காண முடிகிறது.
தொட்டிலில் கிடக்கும் என்னை சலூனில் வேலை முடித்து வந்த அப்பா முத்தமிட்ட கன்னத்தில் இரண்டு மூன்று வெள்ளை முடிகள் ஒட்டியிருந்தன எனும் அவர்,
“எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ” (ஒ.ச.க.ம, ப – 15)
என்கிறார். இந்தக் கவிதை உள்ளிட்ட கலைவாணனின் எல்லாக் கவிதைகளிலும் தலித்தியத்தின் கலகக் குரலோடு தலித்திய அழகியலும், கலைத்துவமும் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இது வரையிலும் எழுத்துலகம் தரிசிக்காத தனித்துவம் நிறைந்த இந்த தலித் எழுத்து முறையே இக்கவிதைகளை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்கின்றன என்பதும் கவனத்திற்கரியது. ஓவியர் புகழேந்தியிடம் ஒருமுறை “கலை” குறித்து கேள்வி எழுப்பிய போது, “கலை என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக, சமூக அவலங்களை வெளிப்படுத்துவதன் மூலம், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.” (விடுதலையின் சாத்தியங்கள், ப-94) என்பார். இந்த நம்பிக்கைதான் தலித் படைப்பாக்கத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
மற்றொரு கவிதையில் படிப்பு வரலண்ணா உங்கப்பன் கூட செரைக்கப் போக வேண்டியது தானலேன்னு கூரை பள்ளிக் கூடத்த மெழுக சாணாங்கிப் பொறுக்க அனுப்பி வச்ச நடராஜபிள்ளை வாத்தியாரை ஒரு நாளு அப்பா செயர்ல இருத்தி ஷேவ் பண்ணுனாரு எனத் தொடரும் கவிதையை கலைவாணன் இப்படியாக எழுதி தன் கோபத்தை வெளிக்காட்டுகிறார்.
“கிருதல இருந்து / கத்தி கீழ இறங்கி
கழுத்துக்கு கிட்ட வரும்போது தோணுது.
அப்படியே வச்சு / ஒரு இழுப்பு இழுத்துர மாட்டாரான்னு
தாயிளி சாவட்டும்” (ஒ.ச.க.ம, ப – 16)
இங்கு இம்மக்களுக்கு இந்த உச்சபட்ச கோபத்தை, மன அழுத்தத்தைக் கொடுப்பவர்களாக உயர்சாதியினர் விளங்குவதை ஒரு உளவியலாளனாக கவிதை எழுதிச் செல்கிறது.
சாதிய சமூகத்தின் வாழ்க்கை வட்டச் சடங்குகளோடு மிகவும் நெருக்கமானவன் நாவிதன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனைக் கவிதை, திருமணவீட்டில் மாப்பிள்ளை, பொண்ணுக்கு மத்த இடத்து மயிருகளை வழித்தல், பந்திக்கு பெஞ்சு தூக்கி போடும் வேலை பார்த்தல், ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு குடைபிடித்தல், மாமன் கல்யாணச் சடங்கு செய்தல், இவை போதாததுக்கு எச்சி இலை எடுக்கச் சொல்கிறான் அவியல் மாடசாமி என்று எழுதும் கவிதை இறுதியாக,
“நாசுவ பய வந்து / இலை எடுக்காத கல்யாணம்
அவனுகளுக்கு தரகுறைவாம் / தின்னுகிட்டு ஏப்பத்தோட போற
ஒரு தாயிளி / சொல்லிட்டு போறான்” (ஒ.ச.க.ம, ப - 30)
என்பதாக முடிவுக்குக் கொண்டு வருகிறார். இந்தக் கவிதையிலும் அவர் ஒடுக்குதலுக்கு எதிராக வலுவான ஒரு எதிர்ப்பை தன்னளவில் முன்வைக்கின்றார்.
இன்னொரு கவிதையில் சுகுமாரன் ஏமானே நன்றாக யோசித்துப் பார் காலம் ஒரு நாள் மாறும் உன் கொட்டங்களெல்லாம் அன்று அடங்கும் என்பதாக நாடக டயலாக்கை பேசி முடித்தவுடன் ஸ்கீரீனுக்கு பின்னால் வந்த அப்பா ஒரு மக்குச் சாராயம் குடித்தார் என்பதோடு,
“செத்த வீட்டில் வைத்து / லே நாசுவ பய வந்திட்டானா
என்று நிசாரமாகக் கேட்ட / சுகுமாரன் நாயர் மேல் இருந்த
கோபம் அப்போது தீர்ந்திருக்காது / அப்பாவுக்கு” (ஒ.ச.க.ம, ப – 43)
என்று எழுதப்படும் இக்கவிதையும் சாதிய அடக்கு முறையினை ஒரு உளவியலாளனாக அவதானித்து பதிவு செய்கிறது. அத்தோடு அவர்களின் உடல் வலியையும், உள்ள வலியையும் தீர்த்துக் கொள்ளவே இந்த மாய மதுவுக்குள் நுழைந்து பின்னர் காலத்தால் அதிலிருந்து வெளியேற முடியாமலேயே போய்விடும் அவலமும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
சாதியக் கலப்பு
சாதியம் என்பது ஒரு மானுடத் துயர் அதை களையவே தலித்திய அரசியல், இயக்கம் பெறுகின்றது. தலித்திய விடுதலை அரசியலின் நோக்கங்களில் ஒன்றாகவும் சாதியக் கலப்பு உள்ளதெனலாம். இது ஒரு நுண்ணரசியலும் கூட. இது காதல், காமம், பாலியல் செயல்பாட்டால் நிகழ்கிறது. இத்தகையதான கவிதையையும் கலைவாணனிடம் காணமுடிகிறது.
“வெஞ்ஞார மூட்டு / விளக்குத் தலை நாயரு
அப்பா எனும் நாசுவன் / ஓடி போனதும்.
இரணியல் / பழனியாண்டி பிள்ளையுடன்
இருபத்தாறு வருட வாழ்க்கையில் / அம்மா
பாதி செட்டிச்சியாகியிருந்தாள்.
சென்னை / வேலை பார்க்குமிடத்தில்
அக்கா / மலையாளியானாள்.
மதுரை / விஜயராமை மணந்ததால்
தங்கை / தேவராகி விட்டாள்” (ஒ.ச.க.ம, ப – 34)
என்பதாக அந்தக் கவிதை சாதியத்துக்குள் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் கலப்பினை புலப்படுத்துகிறது.
உழைப்புச் சுரண்டப்படுதல்
சாதிய ஒடுக்குமுறையின் முக்கியக் காரணிகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் உழைப்பை சுரண்டுவது. குறிப்பிட்ட சமூக மக்கள் மீது திணிக்கப்படும் உழைப்புசார் சுமையினால் அவர்கள் தன்னை, தன் பிள்ளைகளை, குடும்பத்தை மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களுக்கான கொண்டாட்ட மனநிலையை முற்றிலும் இழந்தே விடுகிறார்கள். அவர்களை அச்சமும் பதற்றமும் தொற்றிக் கொண்டு துரத்துகிறது. இது சார்ந்த கவிதைகளையும் கலைவாணனிடம் நிரம்பக் காணமுடிகிறது.
அம்மா, பக்கத்து தெருவுல சுசிலாளுக்க மகா பருவமானதுக்கு பச்சரிசி, கருப்பட்டி, தேங்காய், சுக்கு, ஏலக்காய் சேத்துப் போட்டு இடிச்சி மாவுருண்டை செய்தாள். அந்த பிள்ளைக்க பழைய தூமத் துணியத் தூரப்போட்டு தலைக்கு தண்ணி ஊத்தி, புது துணிகட்டி விட்டா. வந்தவளுக்கு வெத்திலையும் பழமும் சீனியும் கொடுத்தா. பருவமானப் பிள்ளைக்குக் கொடுக்க உளுந்து, முட்டை, ஏத்தம்பழம், நல்லெண்ணை வாங்கிட்டு வரச்சொன்னா. சாணிப்பாலு, தேங்காப்பாலு, கடலுத் தண்ணி எல்லாம் விட்டு வீட்டைச் சுத்தி தெளிச்சி நாசுவத்தி செய்யக் கூடிய எல்லா தீட்டுகளையும் களிச்சிட்டு வந்தா.
“அக்கா பிராயத்துக்கு வந்ததை / யாருக்கிட்டயும் சொல்லல” (ஒ.ச.க.ம, ப – 21)
எனும் வரிகள் விளிம்புநிலை மக்களின் வலி மிகுந்த குரலின் வெளிப்பாடாகும்.
இன்னொரு கவிதையில் தன் தந்தையைச் சார்ந்து நின்ற ஒவ்வொருவரும், அவர்களது பிள்ளைகளும் டாக்டராக, ஆசானாக, ஆராய்ச்சியாளராக, சினிமா டைரக்டராக என வளர்ந்து விட்ட நிலையில் அதற்குக் காரணமான தந்தையின் நிலை அவலத்துக்குரியதாக இருப்பதை,
“இப்படி எல்லாத்தையும் / உருவி கொடுத்திட்டு / அம்மணமா நிக்கிற
எங்கப்பன் பேரு / வெறும் நாசுவன் / என் பேரு / வௌங்காதவன்”
(ஒ.ச.க.ம, ப – 48)
என்று பதிவு செய்துள்ளார். இங்கு தலித் இலக்கியம் பற்றி எடுத்துரைக்கும் சரண்குமார் லிம்பாலே, “தலித் மக்களின் வேதனை, வலி, இடையூறு, அடிமைத்தன அனுபவம், இழிநிலை, ஏளனம், வறுமை, ஆகியவற்றை கலை நுட்பத்துடன் வெளிப்படுத்தும் இலக்கியமே தலித் இலக்கியமாகும். இந்த இலக்கியம் தலித்துகளின் துன்ப, துயரங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகும்.” (தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள், ப-49) என்பது ஏற்புடையதாகிறது.
மற்றொரு கவிதையில் காட்டுமிராண்டி போல் காட்சிதரும் ஒருவனை சவரத் தொழிலாளி எப்படி ஒரு மனிதனாக அழகுபடுத்துகிறான், அப்பணியை செய்யும் ஒரு சமூகத்தை எதிர்நிலையில் இருப்பவன் சாதியின் அடிப்படையில் எப்படி இழிவுபடுத்துகிறான் என்பதை,
“அவரு சுருட்டி கொடுத்த / அஞ்சு ரூபாய்
அப்பா முதுகு வளைஞ்சு / வாங்கும் போது.
ராஜ ராஜ சோழன் சிலையை செய்தவன்
பிச்சை யெடுத்தது போல இருந்தது” (ஒ.ச.க.ம, ப – 22)
எனச் சுட்டிக்காட்டுகிறார்.
முடிவுரை
கலைவாணனின் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் கவிதை நூலினை விளிம்பு நிலை நோக்கில் வாசிப்புக்கு உட்படுத்தியபோது அம்மக்கள் சாதியரீதியாக எவ்வாறெல்லாம் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டார்கள், அடிமைப்படுத்தப்பட்டார்கள், சுரண்டப்பட்டார்கள், என்பதை கவிதை தெளிவுபட எடுத்துரைக்கின்றது. மட்டுமின்றி அவர்கள் மருத்துவம், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்துறை அறிவுடையவர்களாக எங்ஙனம் விளங்கினார்கள் என்பதையும் சுயசாதி பெருமிதத்தோடு பதிவு செய்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கால நகர்வில் தலித் அரசியலின் எழுச்சிக்கேற்ப கலகம் செய்தலும், விளிம்பை மையப்படுத்தலை நோக்கி எங்ஙனம் நகர்த்தத் துவங்கினர் என்பதையும் காட்சிப்படுத்துவதாக கலைவாணனின் கவிதைச் செயல்படுகிறது.
துணை நூல்கள்
1. மகேந்திரன் .சி - அறிவு பற்றிய தமிழரின் அறிவு, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை- 78, முதல் பதிப்பு -2018.
2. தலித் முரசு (தொகுப்பு) - தலித் முரசு பேட்டிகள்-1 விடுதலையின் சாத்தியங்கள், புத்தா வெளியீட்டகம், கோவை -15, முதல் பதிப்பு -2006.
3. செல்வகுமாரன் .சு – சமகால நாவல்களில் புனைவின் அரசியல், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை – 98, முதல்பதிப்பு -2015.
4. சரண்குமார் லிம்பாலே – தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள், புத்தா வெளியிட்டகம், கோவை -15, முதல் பதிப்பு -2018.
5. ரவிக்குமார் – கொதிப்பு உயர்ந்து வரும், காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில், முதல் பதிப்பு – 2001.
6. https://figshare.com/s/9506cf6a3d43625f8123.

ஆய்ந்து மதிப்பிடுகிறீர்கள். பாராட்டு.
ReplyDelete