-
கவிஞர், ஆய்வாளர், பேராசிரியர் எனப் பல நிலைகளிலும் தம் பணிகளைத் திறம்பட ஆற்றிவரும் முனைவர். சு. செல்வகுமாரன், நவீன இலக்கியக் களத்தில் அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்தோர்ப் புனைவு வெளியைத் தம் ஆய்வுக்களமாகக் தேர்ந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றி வருபவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நூல் எழுதி வெளியிடும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, தொடர்ந்து ஆண்டுக்கொரு நூல் வெளியிடுவது என்ற நோக்கில் பல நூல்களை வெளியிட்டுக் கவனம் பெற்று வருபவர். இவர் தம் அண்மைப் படைப்பாக “விமரிசன நோக்கில் அயலகத் தமிழ் புதினங்கள்” என்னும் நூலை ஆய்வு உலகுக்குக் கையளிக்கிறார்.
அயலகப் புதினப் படைப்புகள் பற்றிய நூலை வழங்குவதற்குரிய வாசிப்பு அனுபவமும் ஆய்வு அனுபவமும் ஒருங்கே பெற்றிருந்ததன் காரணமாக இந்நூல் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. தம் முனைவர் பட்ட ஆய்வுக்காக “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியப் படைப்புகள்” என்னும் பொருண்மையில் ஆய்வில் ஈடுபட்டதால் ஈழம் குறித்த சமூகப் பொருளாதார மற்றும் வரலாற்றுப் பின்புலங்களில் இவருக்கேற்பட்ட தெளிவும் பார்வைகளும் இந்நூலாக்கத்தில் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.
90 – களுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் அயலக இலக்கியங்களின் வரவும் அவை பற்றிய வரவேற்பும் குறிப்பிடும்படியாக இருந்தாலும் அவை மீதான வாசிப்பு என்பது குறிப்பிடும் படியாக இல்லை. எனினும் ஒரு சிலர் இதில் தீவிரக் கவனம் கொண்டிருப்பதும் அவர்களில் ஒருவராக சு.செல்வகுமாரன் இருப்பதும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கிறது.
“சமகால ஈழத் தமிழ்ப் புதினங்களைப் பொறுத்தமட்டில் ஈழத்துப் போர் வாசனையோடு புகலிட வாசனைகளையும் விரவியதாய் இலங்கைத் தமிழ் மக்களின் விளிம்புநிலை வாழ்வைப் பேசுகின்றன” என்னும் கருதுகோளை வறித்துக் கொண்டு ஈழத்துப் புதின இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டு அதனூடாக நடுகல், Box கதைப்புத்தகம், பார்த்தினீயம், உண்மை கலந்த நாட்குறிப்புகள், ஊழிக்காலம், கொச்சிக்கட, பெயரிலி, குதிரைவாகனம், விடமேறியக்கனவு, திரிந்தலையும் திணைகள் என்னும் பத்து புதினங்கள் பற்றிய வாசிப்பு அனுபவங்களைத் தம் மதிப்பீடுகளாக இந்நூலின்கண் முன்வைத்துள்ளார்.
பொதுவாக புதின வாசகர்கள்/ விமரிசகர்களில் பலர் வெறுமனே கதைப்போக்குகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு அவற்றைப் பற்றிய மேலெழுந்த வாரியான தகவல்களைத் தந்து செல்வதையே மதிப்பீடு என்று முன்மொழிவார்கள். சிலர் புதினப் படைப்புகளைச் சமூக வரலாற்று ஆவணங்களாகக் காட்சிப்படுத்தும் அளவிற்கு அவற்றை அடையாளப் படுத்துவர். இவை, விமரிசகனின் புரிதலோடு தொடர்புடையவை என்றாலும் விமரிசகனின் பொறுப்புணர்ச்சியையும் சார்ந்திருக்கிறது. ஆனால் புதின மதிப்பீடுகள் மீது ஒருவகையான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. அத்தகைய எதர்பார்ப்புகளுக்கு ஏற்ப படைப்பாளரை விடவும் விமரிசகர்கள் கூடுதல் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. அத்தகையதொரு கடமை யுணர்வோடு இத்தொகுப்பிற்காக செல்வகுமாரன் வினைபட்டிருக்கிறார்.
ஈழத்துச் சமூக அரசியல் பின்புலங்களை மனத்திற் கொண்டு ஒவ்வொரு புதினங்களையும் அணுகி அவற்றின் இலக்கிய நோக்கையும் சமூக நோக்கையும் வெளிக்கொணர்ந்திருப்பதை இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அறிய முடிகிறது. கட்டுரைக்குள் விரிவான கதை சொல்லலைத் தவிர்த்துப் படைப்பாளர் வாசகர்களுக்குக் கூறக் கருதிய மையமான இடங்களை உரிய மாந்தரின் குரலின் வழியாகக் கவனப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு புதினம் பற்றியும் மதிப்புரைக்கும் போது புதினங்களின் கதைச் சூழலுக்கு அப்பால் படைப்பாளனுக்கும் புதினம் கொண்டிருக்கும் சமூகச் சூழலுக்குமான உறவுநிலைத் தொடர்பையும் மிக மென்மையாக அணுகித் தம் இறுதியான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத் தக்கது. மேலும் ஒவ்வொரு புதினத்திலும் உயிர்ப்பான நிலையில் இடம்பெற்றுள்ள பாத்திரக் கூற்றுகளையே தம் மதிப்புரையின் தலைப்பாக இட்டு அணுகியிருக்கும் போக்கு ஒரு புதிய திறப்பாக இருக்கிறது.
எனக்ககாக என்ரை பிள்ளை காத்துக் கிடக்கிறான் (நடுகல்) நிலவு அவனை அறிந்து கொண்டது (B0x கதைப்புத்தகம்) அவித்த இறைச்சி போலக் கிடந்தாள் (ஊழிக்காலம்) ஏண்டா சும்மா இருந்த என் மனச மாத்தின (திரிந்தலையும் திணைகள்) என்பன போன்ற தலைப்புகள் வாசக ஈர்ப்பாக விளங்குகின்றன. இப்படியான தலைப்புகள் அப்புதினங்கள் பற்றிய வாசிப்புக்கு இட்டுச்செல்லும் வலிமையைக் கொண்டிருக்கின்றன. வாசகனைப் படைப்பை நோக்கிச் செலுத்துகிற வேலையைச் செய்கிற விமரிசகன் எப்போதும் கவனிக்கப் படுகிறான். செல்வகுமாரனும் அப்படியான பணியை இதன் மூலம் மேற்கொண்டிருப்பதால் அவருக்கும் அவருடைய விமரிசனங்களுக்கும் அத்தகையதோர் இடம் புலம்பெயர்வு இலக்கிய ஆய்வுச் சூழலில் உருவாகும்.
அதைப்போலவே தீபச்செல்வன் (நடுகல்), ஷோபாசக்தி (Box கதைப்புத்தகம்), தமிழ்நதி (பார்த்தீனியம்), அ. முத்துலிங்கம் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்), தமிழ்க்கவி (ஊழிக்காலம்), ஈழவாணி (கொச்சிக்கட), கௌரி அனந்தன் (பெயரிலி), ஜீவகுமாரன் (குதிரை வாகனம்), குணாகவியழகன் (விடமேறிய கனவு), ஜெயந்தி சங்கர் (திரிந்தலையும் திணைகள்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளைத் தமிழக வாசக நெஞ்சங்களில் நிலைபெற செய்திருப்பதன் மூலம் அவர்கள் மீதான கவனக் குவிப்பை மேற்கொண்டிருக்கிறார். இது ஒரு விரும்பத்தக்க விளைவை ஏற்படுத்தும் என்றே தோன்றுகின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பின் ஆசிரியரான செல்வகுமாரனும் ஈழத்துப் படைப்புலகம் நோக்கி இட்டுச்செல்லும் திசைகாட்டியாக அறியப்படுவார்.
புதினங்கள் எண்பவை வெறும் புனைவுகள் அல்ல. அவை பன்னெடுங்கால மனிதகுல வாழ்வின் மரபுத்தொடர்ச்சியை நினைவூட்டிச் சமகாலச் சமூக இருப்புகளையும் அவ்வப்போது வெளிப்படும் மனித சமூகத்தின் கோர முகங்களையும் இழப்பின் வலிகளையும் அடுத்தடுத்தத் தலைமுறைக்குக் கடத்திக் கொண்டிருக்கும் கருத்தூடகங்கள். அத்தகையதொரு புரிதலை வழங்க வல்லதாக “விமரிசன நோக்கில் அயலகத் தமிழ்ப் புதினங்கள்” அமைந்திருக்கிறது. இந்நூலும் இதன் ஆசிரியர் சு.செல்வகுமாரனும் இப்பணியின் பொருட்டுச் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

Comments
Post a Comment