Skip to main content

பேராசிரியர் ந.முத்துமோகனின் மார்க்சியக் கட்டுரைகள் புலப்படுத்தும் - சாதி - மதம் - இறை



தத்துவத்தளத்தில் மிக நுட்பமான விமர்சனங்களை முன்வைக்கும் பேராசிரியர் ந.முத்துமோகனின் மார்க்சியக் கட்டுரைகள் (காவ்ய -2007). நூற்றி இருபது கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் சில கட்டுரைகளை குமரி,த.க.இ.பெ., பேரா. நா.வானமாமலை நினைவு 33 வது கலை இலக்கிய முகாமில் கட்டுரை வைக்கும் பொருட்டு வாசிக்க நேரிட்டது. (கட்டுரைகள்-6,9,10,11,14,15,16,17,18,19,20,43,44,46,47,48,49,56,57,63,82,83,102,104,107,109,110) அவை குறித்து இக் கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

சாதி, மதம், பக்தி, இறை, வைதீகம்,அவைதீகம் சார்ந்த கருத்துருவாக்கங்கள், புனிதம், புனிதமற்றவை போன்ற எதிர்வுகளின் உருவாக்கம், உலகை ஏற்றுக்கொள்ளுதல், மறுத்தல் எனும் தத்துவங்களின் பின்னணி, வட்டாரம் சார்ந்து வேறுபடும் பக்தியின் தன்மை, குருமார்கள், சித்தர்களின் செயல்பாடுகள், சமண, பௌத்த, சைவ, வைணவ சயமங்கள் என ஒவ்வொன்றின் ஊடாகவும் பயணிக்கும் பேராசிரியர் அவர்கள் அவைகளின் சமூகச் செயல்பாடுகள் குறித்து மிக நுட்பமான விவாதங்களை முன்வைக்கின்றார். குறிப்பாக மேற்சுட்டிய நிலைகளில் சமூகத்தை கட்டமைத்தல், கட்டுடைத்தல் அல்லது மறுகட்டமைப்பு செய்தல் என்பன எவ்வாறு நிகழ்த்தப்பட்டுள்ளன என்பன குறித்த தேடுதலாக அமைவதோடு சமூகவரலாற்றையும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளன.

நான் தேர்வு செய்துகொண்ட கட்டுரைகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. அவைகள் வௌ;வேறு பட்ட விவாதங்களை முன்வைத்தாலும் அடிப்படையில் இருவேறுபட்ட பண்பாடுகளுக்கிடையேயான போராகவே அதனை உணரமுடிகின்றது. ஒன்று சிந்துசமவெளி மக்களிலிருந்து இன்று வரையிலுமாக இந்திய மற்றும் தமிழ் மண்சார்ந்த பூர்வீக மக்களின் பண்பாடு. இன்னொன்று வைதீகம் அல்லது பிராமணியம் சார்ந்த அன்னியமக்களின் பண்பாடு. இவற்றுள் ப10ர்வீக பண்பாட்டை வைதீகம் எவ்வாறெல்லாம் நசுக்கப்பார்த்தது. அதனை காலவளர்ச்சியில் குருமார்களும், சித்தர்களும், அம்பேத்கார், பெரியார் போன்றோரும் எவ்வாறெல்லாம் மீட்டெடுக்க முனைந்தனர் என்பவை குறித்த பதிவுகளாக அமைந்துள்ளன. மேலும் உலகியலை ஏற்றுகொள்கின்ற மக்களின் பண்பாட்டை சமணம், பௌத்தசமயங்கள் எவ்வாறு முன்னெடுத்தன என்பனவும் குறிப்பிடத்தக்கவையாகும். அத்துடன் உலகத்தையும், யதார்த்தங்களையும் மாயை என்று அப்புறத்திய வைதீகம் தமக்கான கருத்தாக்கங்களைக் கொண்டு எப்படி இந்தியச் சூழலில் தம் கால்களை ஆழ ஊன்றிக் கொண்டது. அதற்கு அவை என்னென்ன எதிர்வுகளை கைக்கொண்டது என்பவை எல்லாம் பேராசிரியர் அவர்களால் ஆவணப்படுத்தப் பட்டுள்ள விதம் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாய் உள்ளன. சான்றாக “வானம்பூமி, மேல் கீழ், ஆண்மை பெண்மை, தங்கம்இரும்பு, உயிர் உடல், ஆன்மா இந்திரியங்கள், அறிவு உணர்ச்சிகள், இறைவன் உலகம், பிராமணர் பஞ்சமர், வெண்மை கறுப்பு, ஒளி இருட்டு, நல்லவை கெட்டவை, புனிதமானவை தீட்டு” (ப – 515) போன்ற வேறுபட்ட தன்மை கொண்டவைகளை எதிர்வுகளாகக் கொண்டு அவற்றின் மூலமாக மனிதர்களை, செயல்களை, நிகழ்வுகளை படிநிலைப் படுத்துகின்ற தன்மை அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இந்த எதிர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்களும் தொடர்ந்து சைவ, வைணவ சமயங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பக்தியும் எப்படி உலகியலை மறுக்கின்றன. அவை எவ்வாறு பாமர மனிதனின் மனதில் தமது பணியினை தொடர்கின்றது என்பதற்கு ஒரு சான்றினை இங்கு நினைவு கூர்வது நலம் பயக்கும்.

எங்கள் ஊரில் உள்ள புளியமூட்டம்மன் கோவிலில் (சிவன் கோவில் என்றும் கூறுவார்கள்) எல்லா வருடமும் சித்திரை முதல் நாளில் மதியம்; சிறப்பு பூசையும் அன்னதானமும் நடைபெறுவது வழக்கம். நான் சிறுவனாக இருந்த நாட்களில் ஒருமுறை ஒருசித்திரைத் திருநாளில் எங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவர் நாங்கள் எல்லாம் குளிக்கின்ற கொண்டையான் குளத்தில் நீரில் மூழ்கி இறந்துவிடுகிறார். கோவில் நிகழ்வுகளைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு இளைஞர்கள் பலரும் முன்னின்று இறந்தவரை மீட்டு போஸ்டுமார்டத்திற்கு அனுப்பி விரைவாக பிணத்தைக் கைப்பற்றி புதைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வாழியாக வந்த எங்கள் ஊர் தங்கவேல் நாடார் “ஏல ஒங்களுக்கு செத்தவனோட செவன் கோவில் மோசமிண்ணுகிட்டாடே எல்லாவனும் இங்க வந்து நிக்கிறீய” என்ற ஒரு கேள்வியை எழுப்பியது பலரையும் அன்று காயப்படுத்தியது. அவரை அன்று இயக்கியது இறைவன் உலகம் என்ற எதிர்வும் பக்தியின் கருத்தியல் நிலையும் தான் என்பதை இப்போது உணரமுடிகின்றது. இத்தகைய உருவாக்கங்களை வைதீகமும், பக்தி போன்றனவும் எவ்வாறெல்லாம் நிகழ்த்தி காட்டுகின்றது என்பதை வௌவ்வேறு கட்டுரைகள் மூலம் ந.முத்துமோகன் அவர்கள் தொடர்புப்படுத்தி காட்டுகின்றார்.

வைதீகம்  அந்நிய பண்பாட்டின் செயல்பாடுகளில் முதன்மை யானவைகளில் இன்னொன்று பூர்வீக பண்பாட்டை சார்ந்தவர்களை சாதி அடிப்படையில் (சனாதனதர்மம்) பிராமணர்கள் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் (பஞ்சமர்) என படிநிலைப்படுத்தி அவர்களில் ஒடுக்கப்பட்ட சாதியான சூத்திரர்களிடம் உயர்சாதியினருக்கு தொண்டு, ஊழியம், சேவை செய்தல், அடிமையாக இருத்தல், தியாகம், விட்டுக்கொடுத்தல், கீழ்படிதல் ஆகிய எண்ணங்களை உருவாக்கியமை. காலவளர்ச்சியில் பக்தி இயக்கங்கள் இந்த அடிமை பணியை இறைவனின் பெயரில் இடைநிலை சமூகத்தினர் உட்பட அனைவருக்குமாக பக்தர்களுக்கு வழங்கியது. இங்கு மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு அவற்றை பொதுமைப்படுத்தி இருந்தாலும் தொண்டு ஊழியம் போன்ற இவைகளின் பின்னால் நிகழ்த்தப்படும் பொருளாதார சுரண்டல் என்பது மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாக சுட்டப்படுவது கவனத்திற்குரியது. இங்கு “சூத்திரரின் மீது மற்றவர்களால் திணிக்கப்பட்டுள்ள கடப்பாடுகளுக்கு பக்தி சமூக அங்கீகாரம் பெற்று தருகிறது. அடிமைத்தனம் இலட்சியமாக்கப்படுகிறது. மேலே இருந்து செயல்படும் அதிகாரம் உன்னதப்படுகிறது. அது புனிதப்படுகிறது. அதிகாரத்தை புனிதப்படுத்தும் போது வெகுவாக ஏற்புடைய ஒன்று என்ற மனோபாவம் உருவாக்கப்படுகிறது. மற்றொருபுறம் அடிமைத்தனமும் கீழிருந்து தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.”(ப-184) போன்ற அடிமைச்சமூக உருவாக்கங்கள் குறித்த பதிவுகளும் குறிப்பிடத்தக்கதாகும். மதத்தின் மூலமாகவும் இதே பணிதான் முன்னெடுக்கப்பட்டது. “அடக்குமுறைகளுக்கான சமூக ஒப்புதலை மதங்கள் ஒடுக்கப்படுபவர்களிடமிருந்தே பெற்றுத்தருகின்றன.” (ப-185) என்பதும் “மதத்தின் வெற்றி அடிமை மனோபாவத்தை உருவாக்குவதில்தான் அடங்கிக் கிடக்கிறது என்ற அந்தோனியே கிராம்சியின் கூற்றும்” (ப- 184) நினைவில் கொள்ளத்தக்கது.

மேற்சுட்டிய நிலையில் செயல்பட்ட வைதீகத்திற்கு இந்திய சமூகவரலாற்றில் ஆரம்பம் முதற்கொண்டே வழிநெடுகிலும் இருந்து வந்த எதிர்ப்பினையும்  மாற்று குரலினையும் கூட பேராசிரியர் அவர்கள் மிக நுட்பமாக இனம்காட்டுகின்றார். குறிப்பாக சாருவாகம் என்னும் தத்துவத்தளத்தில் செயல்பட்டவர்கள், சித்தர்கள், குருமார்கள், சூபிகள், சீக்கியர்களின் பிராமணரல்லாதோர் இயக்கம், சமணம், பௌத்தம் போன்றன குறிப்பிடத்தக்கதாகும். மட்டுமின்றி 19 – ஆம் நூற்றாண்டில் இராஜாராம்மோகன்ராய், வள்ளலார், நாராயணகுரு, வைகுண்டசுவாமிகள், அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கார், பெரியார், போன்றோர் இதில் தீவிரமாக செயல்பட்டுள்ளமையும் எடுத்துரைக்கப்படுகின்றது. அத்துடன் அன்பு, கருணை, உண்மை எனும் அறவியல் கருத்துகளை இம்மண்ணிற்கு தந்தவர்களாக சமண, பௌத்த சமயங்களை அடையாளப்படுத்துவதும் அத்தகைய பணி எதனையும் சைவ,வைணவ சமயங்கள் செய்யாதது மட்டுமின்றி பக்தி இம்மண்ணில் கோயில் கலாச்சாரத்தையும், மடங்களையும், சாதி நிலப்பிரபுத்துவத்தையுமே வளர்த்தது என்பதும் உணர்த்தப்படுகின்றது. பக்தி பற்றி பேசுகின்ற போது வடநாட்டு பக்திக்கும் தென்நாட்டு பக்திக்குமான நுட்பமான வேறுபாட்டினைப் பதிவு செய்கின்றார். குறிப்பாக வடநாட்டில் பக்தி தன்னை திடப்படுத்திக் கொள்ள இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்ற கதைசொல்லும் மரபை கைக்கொண்டிருந்ததும் அதன் மூலம் ஒற்றைத்தன்மையிலான தெய்வங்களின் அருள்சார்ந்த கருத்தியலும் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் வட்டாரம் சார்ந்த தாய்தெய்வங்களை புராணக்கதைகளில் பெருந்தெய்வங்கள் திருமணம் செய்துகொண்டு பொதுமைப்படுத்தல் அல்லது வட்டார அடையாளங்களை அழித்தல் எனும் பெரும் பணியினை இந்தகதைகள் மூலமாக செயயப்படுவதும் உணர்த்தப்படுகின்றது. இங்கு கதை அல்லது வரலாற்றின் மூலமாக வினைக்கோட்பாட்டை முன்வைத்த பௌத்த சமணர்களின் மரபினை நினைவுபடுத்துவதோடு வடநாட்டுகதை உருவாக்கத்திற்கான நோக்கம்  அவசியம் குறித்து கேள்வி எழுப்ப படுகின்றது. அத்துடன் தென்னிந்திய பக்தி இசைக்கு முதன்மை கொடுத்திருப்பதை சுட்டுவதோடு கதை, இசையினையும் நாட்டுப்புற மக்களிடம் இருந்தே அவர்கள் தேர்வு செய்திருக்கலாம் என்பதாக பக்தியின் சூட்சுமங்கள் தொடர்பான ஒரு தேடலை பேராசிரியர் அவர்கள் தமது கட்டுரையில் நிகழ்த்துகின்றார். மேலும் பக்தி பற்றியான உரையாடலில் “குடும்பத்தில் பெண்ணும், உற்பத்தியில் உழவனும், கோயிலில் பக்தனும் ஒரே நிலையில் வைக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையே ஆண்களோடும், நிலச்சுவானோடும், இறைவனோடும், ஒரேவித உறவுகள் கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். குடும்ப உறவுகளுக்கும் நிலஉடமை உறவுகளுக்கும் முன்மாதிரியான உறவுகளாக பக்தி உறவு சித்தரிக்கப்படுகிறது.” (பக்-183) என்பதும் அவரின் கூர்மையான மார்க்சிய நோக்கை புலப்படுத்துவதாய் உள்ளது.

அனைத்துக் கட்டுரைகளையும் மிகுந்த நுட்பமான பார்வையோடும், சான்றுகளோடும் பேராசிரியர் அவர்கள் முன்வைத்திருப்பினும் வானம்  பூமி என்ற எதிர்வு குறித்தான கட்டுரையில் (பக் - 449) அவர் முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றுகொள்வதில் சிரமம் இருப்பதை உணரமுடிகின்றது. அன்னியர்களான ஆரியர்களை வானம் சார்ந்த கலாச்சாரம் உடையவர்களாக அடையாளப்படுத்தும் அவர் வானம் ஒற்றைத்தன்மை கொண்டது என்றும் அது மாற்றத்தை ஏற்காதது என்றும் குறிப்பிடுவது கேள்விக்குரியதாகின்றது. பூமியை போலவே வானமும் பன்மைத்தன்மையுடன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக் கூடியது படைப்புத்தன்மையுடையது என்பதையும். நாம் அதன் இயக்கத்தின் மூலம் உணர்ந்துக் கொள்வது எளிது. அது போலவே அவர்கள் வணங்குகின்ற தெய்வங்களின் சிலவான அக்னி, சூரியன், இடி, மின்னல், வாயு, வருணன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு பூமியோடும் பயிர் பச்சைகளோடும் தொடர்பு கொண்ட கடவுளரே அவர்களிடம் இல்லை என்பதும் ஏற்கதக்கதாக இல்லை எனலாம். ஏனெனில் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற தெய்வங்களில் பெரும்பான்மையும் பயிர் பச்சைகள் வளர்வதற்கு ஆதாரமானவை. எனவே இக்கட்டுரையில் சிலக்கூறுகளை பொருத்திப் பார்க்கலாமே தவிர மாறாக இந்த சான்றுகளை கொண்டு தமது கருத்தினை உறுதிப்படுத்த விளைவதோ, வானம் பூமி என்ற எதிர்வுகள் வழியாக தான் இந்திய பண்பாட்டிற்குள் நுழைய முடியும் என்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்றாகவே கருத இடமளிக்கின்றது.

இந்திய வரலாற்றில் சாதியம் குறித்தான பதிவுகளும், இடைநிலை சாதிகள் பிராமண எதிர்ப்பு என்பது தாம் விரும்பிய மேல்நிலையாக்கத்தை பெற்ற உடன் சமரசம் செய்து கொள்கின்ற இரட்டை வடிவத்தில் தொழில்படுவதான குற்றச்சாட்டும், குறிப்பிடப்படுகின்றது. மட்டுமின்றி அவை அதிகாரப் போட்டிக்கான ஒரு கருவியாகவே இந்திய வரலாற்றில் அதிக அனுபவம் பெற்றுள்ளதையும் சாதி ஒழிப்புக்கான கருவியாக அது அனுபவம் ஈட்டவில்லை என்பதும் முதன்மைக்குரிய பதிவாகின்றது. மேலும் இந்திய வரலாற்றில் அடித்தள மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டிருப்பது பிராமண வருணத்தவரால் மட்டுமல்ல பிராமண எதிர்ப்பைப் பேசிக் கொண்டு சாதியத்தை மறுகட்டமைப்பு செய்த பிராமணர் அல்லாத மேட்டுகுடிகளாலும் தான் என்பதும் இடைநிலை சாதியினரின் மோசடித் தனத்தை சுட்டுவதாக உள்ளது. அதுபோலவே சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் விடுதலைக் கூறுகள் அழிக்கப்பட்டு அது எவ்வாறு சாதிக்கலவரம் என்ற சொல்லாடலாக மாற்றப்பட்டு அதன் சமூக அங்கிகாரத்தை இழக்க செய்கின்றது என்பதும் மிகவும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகின்றது. அது போலவே அம்பேத்காரின் சாதி, மதம், மதமாற்றம் குறித்த மிக தெளிவான புரிதல், கீதையின் அரசியல் என பலவும் அவரின் தீவிரமான வாசிப்பினையும் பிரச்சனைகளை உண்மையான சமூக கரிசனத்தோடு அணுகுகின்ற தன்மையினையும், நுட்பமான பார்வையினையும் புலப்படுத்துவதாய் உள்ளது.

Comments

  1. சமூக, சாதி மத ஏற்றத்தாழ்வுகள் தங்கள் நினைவில் தாக்கம் பெற்றுள்ளன. மக்கள் நலம் நாடும் மாண்பு உங்களின் உந்துதலாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

விளிம்புநிலை வாசிப்பு நோக்கில் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் சு.செல்வகுமாரன்

முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின...

மௌனம்

எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய் சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய விட்டில் பூச்சியின் அவஸ்தையாய் நிகழ்ந்திருந்தது உனது மரணம் விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில் கண் இமைகளுக்குள் சிறகசைத்துப் பறந்து கொண்டிருக்கிறாய் நீ ஓவியக்காரனின் தூரிகையாய் மீளவும் மீளவுமாய் நனைந்தபடி கொலைக்காரர்களின் மனங்களைப் போல அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது