ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ ‘ம்’ புனைவுகள் ஈழப்போர், புலம்பெயர்ச் சூழல், புகலிடத்துச் சிக்கல்கள் குறித்து பேசுவதில் மிகவும் முதன்மை வகிக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பற்று, அவர்களின் அப்பாவித்தனம், உணர்ச்சி பற்றி விரிவாக பேசுகின்றன. மட்டுமின்றி ஈழவிடுதலை இயக்கங்களின் அதிகார துஷ்பிரயோகம் இலங்கை, இந்திய இராணுவத்தின் வன்மத்தையும் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளன.
ஷோபாசக்தியின் புனைவுகள் கட்டமைப்பிலும் வேறுபட்ட புதிய நிலைகளை அறிமுகம் செய்கின்றன. கொரில்லா சுமார் 20 பக்க அளவிலான ஒரு தஞ்சம் கோரும் கடித விண்ணப்பத்தின் மூலம் ஆரம்பமாகின்றது. அதன் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ள கவிதைகள், பாத்திரங்கள், இடங்கள், பெயர்களுக்கான வரலாற்று குறிப்புகளுடனான விளக்கங்கள் ஓர் அகராதியியல் நிலையை தன்னகத்தே கொண்டுள்ளதை உணர்த்துகின்றது. இவ் அகராதியியல்த் தன்மை ஈழப்போர், இயக்கங்கள், மனிதர்கள், புலப்பெயர்வு குறித்தான உண்மைத் தன்மையினை நமக்கு வெளிப்படுத்துவதோடு ஒரு சமூக, வரலாற்று நாவலாக தம்மை பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘ம்’ இன்னொரு தளத்தில் கட்டமைப்பில் பல புதிய நிலைகளைக் கொண்டுள்ளது. கதையில் முதன்மைப் படுத்தப்படும் பாத்திரங்கள், இடம், பொருட்களின் பெயரினை அதன் அருகே பெரிய எழுத்துக்களால் குறிப்பிட்டிருப்பது ஓரு உத்தியாக அமைகின்றது. அவை வாசகனுக்கு ஏற்படும் சந்தேகங்களை எளிதாகத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும்ää முதன்மையானவைகளை மனதில் நிலைப்படுத்திக் கொள்ளவும் துணை செய்வதாக அமைகின்றன.
‘கொரில்லா’ ஏசுதாசன் அவனது மகன் ரொக்கிராஜ் பாத்திரங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. ஈழத்தின் விடுதலைக்காக இயக்கப் பணி செய்த ரொக்கிராஜ் நாட்களின் நகர்தலில் பாரிஸில் யாகப்பு அந்தோணிதாசனாக அறிமுகமாகி தஞ்சம் கோரும் விண்ணப்பத்தின் மூலம் தனது இளமைக்கால அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஈழத்து வரலாறு மிகத் தெளிவாக முன்வைக்கப்படுகின்றது. இங்கு அதிகாரம் வன்முறை பற்றிய பதிவுகளில் இலங்கைராணுவம், அமைதிப்படை, தமிழ்ப் போராளிக்குழுக்கள் மூன்றையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பதும், அவை சார்ந்த அதிகாரிகளின் கேள்விகளும், இவ்வமைப்புகள் குறித்தான விமர்சனங்களும், மதிப்பீடுகளும் முதன்மையான வரலாற்றுப் பதிவுகளாக நாவலில் காண முடிகின்றது. “ஏதாவது ஒரு உறுதியான அரசியல் காரணத்தாலேயே எங்களை நோக்கிச் சுடப்படும் துப்பாக்கிக் குண்டு எந்தச் சுடுகுழலின் வழியாக வந்தது என்பதை எம்மால் பல சமயங்களில் அறிந்து கொள்ள முடிவதில்லை” (கொ.பக்-14)என்பதான வரிகள் இதனை உறுதி செய்கின்றன.
இன்னொரு தளத்தில் இயக்கங்கள் மீது மக்கள் காட்டுகின்ற அதீதமான கரிசனையை வெளிப்படுத்தும் ஷோபாசக்தி ஒரு சமயம் ‘அசுர அடி’ எனும் ஒப்பேறசனை இலங்கை இராணுவம் ஸ்ராட் பண்ணிய போது அதனை எதிர்கொண்ட விடுதலை இயக்கத்தினர் மருத்துவமனைப் படுக்கைகளில் கிடந்த போது தமிழ் மக்களின் பங்களிப்பு எத்தகையதாய் இருந்தது என்பதை “எல்லா இயக்கங்களும் தங்களால் ஏலுமான வழியளால் ஆமியை மறிச்சு அடிபட்டினம், யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியின்ற ஏழாம் நம்பர், எட்டாம் நம்பர் காய வார்ட் முழுக்க இயக்கப் பொடியளால நிறைஞ்சு போச்சு. காயப்பட்ட இயக்க பொடியளுக்கு இரத்தம் குடுக்க பள்ளிக்கூட பொடி பொட்டையளிலிருந்து கிழடுகட்டைகள் வரைக்கும் ஆஸ்பத்திரி வாசலில் லைனில் நிற்குதுகள்”(கொ.பக்-76)என்பதன் மூலம் காட்சிப்படுத்துகின்றார். மற்றொரு இடத்தில் இயக்கத்திற்குச் சொந்தமான சிலிண்டரை ரொக்கிராஜ் திருடியதாகக் காசியால் வெளியேற்றப்பட்ட சில தினங்களில் வீட்டிற்கு வந்த ரொக்கிரஜியிடம் தங்கை பிரின்ஸி பப்பாவும் அண்ணன் மிக்கேலுந்தான் சிலிண்டரை திருடி மீனுக்கு டைனமெட் அடிக்கிற ஆக்களுக்கு வித்துப் போட்டுக் கட்டுக் கட்டாய் காசு கொணர்ந்து வைச்சிருக்கினம். நீ இயக்கத்திற்கு சொல்லிக் கொடுக்கிறதென்றால் கொடு என்று கூறுவது மக்கள் இயக்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை உணர்த்துகின்றது.
‘ம்’ புனைவு 1983 ஜுலை 23 -ல் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை நேசகுமாரன், பக்கிரி, சீனா பாத்திரங்களின் உரையாடல் மூலமாக முன்வைக்கின்றது. வெலிக்கடைச்சிறை படுகொலைகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தியுள்ள படுகொலைகள் புலப்படுத்தப்படுகின்றது. அவை கொடூரமான தண்டனைகளின் ஊடாகவும், சிங்களக் கைதிகளைக் கூட்டாகக் கட்டவிழ்த்த நிலையில் ஏவிவிட்டும் நிகழ்த்தப் பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் சிங்கள அரசின் ஸ்திரமற்ற தன்மை, இராஜதந்திரத்தைப் பிரதிப்பலிப்தோடு அவ்வரசைக் கோள்விக்குள்ளாக்குவதும் குறிப்பிடத்தக்க தாகும். மேலும் ஈழத்தில் தமிழர்களைக் காவு கொள்கின்ற விதத்தில், குறிப்பிட்ட காலங்களில் சிங்களவர்களின் நீதியமைப்பே மாற்றப்பட்டு இருந்தமையும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்ப் போராளிகள் போராட்டக்களத்தில் படுகின்ற துயரமென்பது சொல்லிவிட இயலாதபடி கழிவிரக்கத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்துவதாய் உள்ளது. புனைவில் இடம்பெற்றுள்ள குட்டிமணி, தங்கத்துரை, டேவிட்ஐயா, அமிர்தலிங்கம், கலைச்செல்வன், நேசகுமாரன், மாத்தையா போன்றோரின் துன்பங்கள் சமூக - வரலாற்று நோக்கில் ஆழ்ந்து நோக்கத்தக்கவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புனைவாக இருப்பினும் ஈழவரலாற்றினை கூர்மைப்படுத்தி உலகத் தமிழர்களுக்கு எடுத்துரைப்பதில் மிகுந்த பங்களிப்புச் செய்கின்றன. டொம்பர்ராசன் போன்ற இளைஞர்கள் தமிழினத் தலைவர்களுக்கு இரத்தத்திலகமிடுதல் நிகழ்வுகள் இளைஞர்களின் தமிழின உணர்வை, பற்றினை எடுத்தியம்புவதாக உள்ளன. ஈழ அரசியலில் முதன்மை வகித்த அமிர்தலிங்கம் அரசியலுக்கு வந்த கதையும் ஒருவித நையாண்டித் தனத்தோடு முன் வைக்கப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இன்னொரு தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிநுட்பமான செயல்திறனை அடையாளப்படுத்தும் போது ஒருமுறை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தமது தவறுகளை ஒப்புக்கொண்டு விடுதலை பெற்ற நேசகுமாரனும், மாற்று இயக்கத்தைச் சேர்ந்த பக்கிரியும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் பல்வேறு இராணுவ மற்றும் இயக்க முகாம்களின் சோதனைகளைத் தாண்டி பயணத்தை மேற்கொள்வதும் இந்நிலையில் பக்கிரி மாற்று இயக்கத்தைச் சார்ந்தவன் என்பதை இனம் கண்டு கொண்ட தமிழீழவிடுதலைப் புலியினர் பயணத்தின் ஊடாகவே அவரை இடைமறித்துக் கைது செய்வது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுப்பதாக உள்ளது. இங்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திறன் பற்றிப் பேசும் நேசகுமாரன் “நான் இவர்களைப் பற்றிக் கதை கதையாக அறிந்திருக்கிறேன். இவர்களின் நிர்வாக அமைப்பே சமாளிக்க முடியாமல் திணறும் அளவுக்கு இவர்கள் தனிமனிதர்கள் குறித்தத் தகவல்களை அபரிமிதமாகத் திரட்டி வைத்திருக்கிறார்களாம். அவர்களின் உளவுத் துறைப்பின்னலும்ää வேவுபார்க்கும் ஆற்றலும் கற்பனைக்கு எட்டாத திறன் கொண்டவை என்று பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இவர்களுடைய இயக்கத்தின் முழுசக்தியையுமே மற்றவர்களைக் கண்காணிப்பதிலேயே செலவிடுகிறார்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.” (கொ.பக்-152) என்பதாக இயக்கத்தின் பெருமைகளைக் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
‘ம்’ நாவல் முன்வைத்துள்ள கருத்துக்களில் மிகவும் முதன்மையான ஒன்றாக குறிப்பிடத்தக்கது. திம்புவில் இலங்கை அரசுக்கும், போராளி இயக்கங்களுக்குமான பேச்சுவார்த்தைகள் துவங்கிய போது, வெலிக்கடை சிறையில் இருந்த நேசகுமாரன், பக்கிரி உட்பட முக்கியமான ஈழ அரசியல் போராளிகளை ஒன்றுகூட்டி விவாதித்து சில தீர்மானங்களை இயற்றி அதனை இலங்கை அரசுக்கும், இயக்கத் தலைமைகளுக்கும் அனுப்புவதும், அதனை கணக்கில் கொள்ளாத தலைமைகளை அடையாளப் படுத்துவதும் ஒருநாட்டின் அரசியல் போராட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் அரசியல் போராட்டத்தில் சிறைக்கைதிகள் என்பவர்கள் தலைமைப் போராளியாக, முதன்மையானவர்களாக கணக்கில் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பது இங்கு சுட்டப்பட்டுள்ளது.
1980 - களுக்குப் பிந்தைய காலகட்டங்கள் போரின் உஷ்ணமான காலகட்டங்கள் எனலாம். இக்காலகட்டங்களிலும் ஈழத்தில் இனவெறியின் இரத்தத்தின் ஊடாக தமிழ் மக்களின் சாதிய இரத்தமும் சிந்தப்பட்டு கொண்டிருப்பதை ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ ‘ம்’ புனைவுகள் பதிவு செய்துள்ளன. இப்பதிவுகள் ஈழத்தமிழ்மக்களின் விடுதலை இயக்கங்களின் உள்முரண்களையும் கேள்வி எழுப்பும் விதமாக அமைகின்றது. கொரில்லா நாவலில் மாட்டுவண்டிப் போட்டியில் வென்றவருக்குப் பரிவு வழங்க வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கட்சியைச் சார்ந்த குமாரசாமி எம்.பி.யின் மூலம் சாதி வெறியை அடையாளப்படுத்தும் ஷோபாசக்தி “ஒரு சீவல்காரனுக்கு மாலை போடக் கூடாதென்று முற்றெடுத்த குமாரசுவாமி எம்.பி. மாலையோடு யோசித்துக் கொண்டே போக கப் எடுத்து குஞ்சனும் தயாராய் நிற்க குமாரசுவாமி படாரென்று மாலையைக் குஞ்சனின் மாட்டுக்குப் போட்டானாம். மாடுதானே ஓடிவென்றது. அதனால் மாட்டிற்குத்தான் மாலை என்று குமாரசுவாமி விளக்கம் அளித்தானாம்” (கொரில்லா. பக் - 38) என்பதாகப் பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியாக மாட்டினை விலைக்குக் கேட்பதும் கொடுக்காத நிலையில் அவனது தொழிலுக்கு இடையூறாக பனை மரங்களை அழித்தல், மாட்டுக் கொட்டகைக்கு தீவைத்தல், குஞ்சனின் மனைவியை தீக்குள்ளாக்குதல், குஞ்சனின் குடும்பத்தினரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருத்துதல் போன்ற நிகழ்வுகள் ஈழத்து உயர்சாதியினரின் திட்டமிட்ட ஒடுக்கு முறைகளாக அமைந்துள்ள சமூக வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
மேற்சுட்டிய சாதிய ஒடுக்கு முறைகளுக்கு விடுதலை இயக்கங்களும் துணைபோயுள்ள குற்றச்சாட்டும் ‘கொரில்லா’-வில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். “குஞ்சன் வயலுக்குள் இயக்கங்கள் நுழைந்த காலங்களில் மற்றைய ஊர்களைப் போலவே இங்கேயும் சாதி வாரியாகத் தான் இயக்கங்களில் இணைத்துக் கொண்டார்கள். அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதும், இயக்கங்களால் சமூகவிரோதிகள் எனச்சொல்லப்பட்டு சனங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் மற்றைய ஊர்களைப் போலவே இங்கேயும் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு பஞ்சமரே” (கொரில்லா. பக் - 41) என்பதும் தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுக்கும் இவ்வமைப்புகளிடையேயும் பரவலாகக் காணப்படும் சாதிய உணர்வினை வெளிப்படுத்துகின்றது. கொரில்லா நாவல் குறித்து விமர்சனம் செய்துள்ள எம்.ஆர். ஸ்ராலின் இயக்கம், சாதியம் குறித்துப் பேசும் வரிகள் குறிப்பிடத்தக்கதாகும். “தம்பி, நாங்கள் எளிய சாதியள் இரண்டைக்கு நீங்கள் பொடியளெல்லாம் சாதி வித்தியாசம்பாராம எல்லா வீட்டிலும் கையலம்பிப் போறியள் எங்களுக்கும் அது விருப்பம் தான் நாங்கள் ஏலுமானதச் செய்யிறம். ஆனால் இந்தத் தமிழீழம் கிடைச்ச பிறகும் நீங்கள் இப்படி வந்து போவியளோ. நீங்கள் தமிழீழம் கிடைச்சபிறகு மாறியிடுவியள் எண்டு கதைக்கினம் உண்மையா” (எக்ஸில். ஆகஸ்டு-2002 பக் - 38) என்று கேள்வி எழுப்புவதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
‘ம்’ நாவலில் ஈழத்து வெள்ளாளர்களின் சாதிய ஒடுக்குமுறை குறித்த மிக அழுத்தமான பதிவுகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஈழத்து சாதிய அடுக்கு பற்றி அறிமுகப்படுத்தும் ‘ம்’ ஒரு பெரிய பட்டியலை நமக்கு வரிசைப்படுத்திக் காட்டுவது படிநிலை முறையிலான சாதிய கட்டமைப்பு முறை பற்றிய புரிதலை இன்னும் விரிவடையச் செய்வதாய் உள்ளது. மட்டுமின்றி ஈழத்தில் நெகிழ்ச்சியற்ற நிலையில் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் சாதியம் கிறிஸ்தவத்திலும் இருந்து வருவதையும் இனம் காட்டுகின்றார். குறிப்பாக சிங்களவர்களிடையே சாதிய ஒடுக்குமுறை இல்லாத நிலையினை பதிவு செய்யும் அவர் “பனைத்தீவு அரசாங்கப் பாடசாலையில் பத்தாவது வகுப்பு வரையே மூன்றே மூன்று ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டன. பாடசாலையின் ஆசிரியர்கள் பள்ளதிக்குக் குழந்தைகளை அப்பாட சாலையில் சேர்க்க மறுத்தார்கள். தீவில் கிடந்த ஒரேயொரு ஓலைக்கொட்டில் சலூனில் கூட பள்ளர்கள் நுழைய முடியவில்லை. தேவாலயத்தின் இடதுபுற ஓரம் வேதக்கார பள்ளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பள்ளதிக்குப் பெண்கள் துப்பட்டி போட்டு கோயிலுக்குள் வரமுடியாது. சிறிலும்பினி வித்தியாலாவில் அய்ந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அந்தப் பாடசாலை இரண்டு புத்த பிக்குகளால் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தான் பள்ளத்திக்கில் இருந்த குழந்தைகளும் பள்ளிக்கூட வாசலை மிதிக்கலாயினர்.”(ம்.பக் - 19) அது போலவே செட்டிநாடு அந்தோணியார் கோயில் திருவிழா கூடுதூக்கும் நிகழ்ச்சியில் பள்ளர்கள் கூடு தொட்டுத் தூக்கக் கூடாது என்பதும், நேசகுமாரன் தலைமையில் முன்னெடுக்கப் படுகின்ற எதிர்வினைகளும், பிரச்சனைகளும் முதன்மையான சமூக வரலாற்றுக் குறிப்புகளாக முன்வைக்கப்படுகின்றன.
ஈழவிடுதலைப் போரினை முன்னெடுத்துச் செல்வதற்கு இயக்கங்கள் பலப்படுத்தலும் மக்களின் இணைவும் அவசியமாகின்றது. இந்நிலை பெற்றோர்கள் குழந்தைகளிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துகின்றது. இவை குறித்து நாவலில் பரவலாகப் பேசப்படுகின்றன. நாவலில் ரொக்கிராஜ் வீட்டில் இருந்து வெளியேறி இயக்கத்தில் இணைகிறார். இது தந்தை - மகன் - குடும்பம் - உற்றார் - உறவினர் என உறவில் மிகப் பெரிய விரிசல்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. ரொக்கிராஜ் இயக்கத்திற்குச் சென்றது குறித்துத் தந்தை கொரில்லா பக்கத்து வீட்டு கிளாக்கா எனும் கம்யூனிஸ்டுகாரர் ஒருவரிடம் பிரச்சனை செய்வது கம்யூனிசத்தையே கேள்வி எழுப்புகின்றது. மேலும் யாழ் இந்துக்கல்லூரியில் ஓராண்டு விடுமுறைக்குப் பிறகு 163 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை என்பதான குறிப்புகளும் நமக்கு இதனை விளக்கப்படுவதாக உள்ளது. ரொக்கிராஜின் இயக்கப் பயணமானது தந்தை கொரில்லா, தாய் ஜெயசீலி இடையே பெருத்த பிரச்சனையை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கதாகும். மட்டுமின்றி இவ்விதக் குடும்பப் பிரச்சனைகளில் சில குடும்பங்கள் இயக்கத்திடம் தீர்வு கோருவதும், சில பிரச்சனைகளில் இயக்கமே தலையிட்டு வன்முறை செய்வதும், தீர்வு எழுதுவதுமான ஒருவித போக்கினை ஷோபாசக்தி இந்நாவலில் பதிவு செய்துள்ளார்.
‘ம்’ நாவலும் போர், இயக்கத்தினை பலப்படுத்தல் பெற்றோர் பிள்ளைகளிடையே ஏற்படுகின்ற இடைவெளி குறித்து எடுத்துரைக்கின்றது. நேசகுமாரன் பிலிமத்தலாய கத்தோலிக்க இறையியல் கல்லூரிக்குத் தந்தை ஏர்னஸ்டின் கடும் முயற்சியால் அனுப்பப்பட்டவர். போர்ச்சூழலானது நேசகுமாரனைத் தாய்நாடு சார்ந்த தீவிரவாதச்செயல் புரிய செய்கின்றது. இதனால் ஏர்னஸ்டு படும் மனத்துயரங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இறுதி வரையில் ஏர்னஸ்டின் ஆசை நிராசையாகவே போகின்றது. அதுபோலவே வல்லிபுரத்தின் மகனான கலைச்செல்வனும் தந்தையின் எண்ணங்களுக்கு மாறாகத் தீவிரவாத வேலைகளில் ஈடுபடுகிறான். பொதுநல உணர்வோடு வல்லிபுரத்துக்குச் சொந்தமான நிலங்களை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முயல்வதும் தந்தை மகன் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்துகின்றது. ஆக போர்ச்சூழலும், இயக்கங்களின் செயல்பாடுகளும் ஈழத்தில் பெற்றோர் குழந்தைகளின் இடைவெளியினை தூரப்படுத்துவதாய் உள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கங்களின் உள்முரண்கள் பற்றிய பதிவு நாவலில் நிரம்ப காணப்படுகின்றன. அவை இயக்கங்களிடையேயான முரண்களாகவும் ஒரே இயக்கத்தினுள் உள்கட்டமைப்பு, பயிற்சி, கொள்கைகள், தலைமைத்துவம், அதிகாரம் சார்ந்த முரண்களாகவும் இடம்பெற்றுள்ளன. மேலும் இயக்கத்தில் இணையும் நபர்களைத் தமது இயக்கத்திலேயே நிலைப்படுத்திக் கொள்ள இயக்கத்தில் இணையும் உறுப்பினர்களிடம் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையெழுத்து பெறுகின்ற விண்ணப்பத்தில் “நீங்கள் எமது புரட்சிகர இயக்கத்திலிருந்து விலக்கப்படும், அல்லது விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் வேறு அரசியல் இயக்கங்களில் இணைத்துக் கொண்டாலோ அல்லது புதிதாய் ஒரு அரசியல் இயக்கத்தைத் தொடங்கினாலோ எமது இயக்கத்தின் அதிஉயர்பட்சத் தண்டனையான மரணதண்டனை உங்களுக்கு வழங்கப்படும்”(ம். பக் - 19) என்பனவும், இயக்கத்தைச் சேர்ந்த தயாவரமூர்த்தி என்பவர் உடல்நிலை சரியில்லாது சொல்லாமல் வெளியேறியதற்காக அவரைப் பிடித்து மூஞ்சையுடைத்து குசினி வேலையில் பனிஸ்மென்ற் குடுத்து வைத்திருப்பதாகப் பதிவும், விநாயகமூர்த்தி தயாவரமூர்த்தி (1968-1985) இயக்கத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு சில நாட்களிலேயே மரணம் ஆகியதான பதிவும் சமூக வரலாற்று ரீதியில் இயக்கத்தின் மீதான கடுமையான விமர்சனங்களாக அமைகின்றன.
ஒரு முறை குஞ்சன் வயல் சென்ரிப் - போயின்ற் - ல் ரொக்கிராஜ் உடன் பணியாற்றிய ஓஷிலா இயக்கத்திடம் இருந்து தப்பி ஓடியபோது மறுநாள் பாஸிஸ்ட்டுகளே ஓஷிலா எங்கே? எனும்; துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தமை இயக்கத்தின் வன்மம் குறித்து கேள்வி எழுப்புவதாய் உள்ளது. இன்னொரு முறை இயக்கத்திற்கு பணஉதவி செய்யும் ஆதரவாளரான விசயகுமாரின் ஆட்கள் இயக்கத்தால் தடைசெய்யப்பட்ட பகுதியில் மண் ஏற்றியமையை ரொக்கிராஜும் ரவியும் தடுத்ததற்காக இயக்கத்தின் அப்பகுதி தலைமைப் பொறுப்பாளரான காசியால் அவர்களை விசயகுமார் வீட்டிற்கு அழைத்து வந்து தண்டிக்கப்படுவது இயக்கம் சார்ந்த அதிகார துஷ்பிரயோகத்தை அடையாளப்படுத்துவதாய் உள்ளது. “ரொக்கிராஜும் ரவியனும் நிண்டு கொண்டு தான் இருக்கினம். விசயகுமார் காசியைப் பார்;த்து சிரிச்சுக் கொண்டே இவையள் தான் அந்த நெத்தலிப் பயில்வான்கள் எண்டான். ரவியனுக்குக் கோவம் வந்திற்றுது. என்ன நெத்தலிப் பயில்வான் என்டு தேவையில்லாத கதைகள் எண்டு மெதுவாய்ச் சொன்னான். காசி ஆவேசமாய் டேய் பொத்தடா வாயை எண்டு ரவியனைப் பார்த்துக் கத்தினவன், பிறகு ரெண்டு பேரும் செய்தது பிழையெண்டு அண்ணயிட்ட மன்னிப்பு கேளுங்கோ, உங்களால் இயக்கத்துக்கெல்லோ தலைகுனிவும் பரிவு கேடும். ரொக்கிராஜுக்கு சுள்ளெண்டு பத்திற்றது? நாங்கள் ஏன் மன்னிப்பு கேக்க வேணும் அவையள் மண் ஏத்தினது முதல் குற்றம். கடலரிப்பு வராமல் மறிக்கிறதுக்காக எண்டு ரொக்கிராஜ் முடிக்கயில்ல காசி பாய்ஞ்சு ரொக்கிராஜின்ர கன்னத்தில் அடிச்சான். உனக்கு நான் இவற்ற றக்ரரை மறிக்கச் சொல்லிச் சொன்னனானோ? இஞ்ச நீ இயக்கம் நடத்துறியா? இல்ல நான் இயக்கம் நடத்துறனா? போய் ஏறுங்கடா வானில எண்டு காசி கத்தினாhன்.”(கொரில்லா.பக் -117) தொடர்ந்து இயக்கத்தில் இருந்து ரவி தப்பி வெளியேறுதல், ரொக்கிராஜ் வெளியேற்றப்படல், பிரச்சனையை ரொக்கிராஜ் தலைமைக்குக் கொண்டு செல்லுதல், காசி பல்வேறு குற்றச்சாட்டுகளை ரொக்கிராஜ் மீது திணித்து வன்முறைக்குள்ளாக்குதல் போன்ற நிகழ்வுகளை “கணக்கில் கொள்கின்ற போது தமிழீழ விடுதலைப்போரை முன்னெடுக்கும் இவ்வியக்கங்களின் உள்கட்டமைப்பில் உள்ள சிக்கல்களையும் முரண்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கு இன்றைய எமது தேவை தேடல்தான். தாச்சியில் இருந்து பாய்ந்து நெருப்பில் விழும் நிலை தான் எமது நிலை என்பது எனக்குப் புரிகிறது. அது எல்லோருக்கும் புரிய வேண்டும். நெருப்பை அணைத்தால் தான் பிரச்சினைக்கான தீர்வு என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். இன்றைய எமது தேவை உண்மைக்கான போராட்டமே.” (ஈ.போ.எ.சா. பக் - 14) எனும் புஷ்பராஜாவின் கூற்று குறிப்பிடத்தக்கதாகும்.
‘ம்’ நாவலிலும் பக்கிரி மூலமாக இயக்க அதிகாரம் புலப்படுத்தப்படுகின்றது. மாற்று இயக்கத்தைச் சார்ந்தவன் என்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பக்கிரி இயக்கங்களினால் பட்ட துயரங்கள் அவனது அனுபவத்தின் ஊடாக முன்வைக்கப்படுகின்றது. இவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகாரத்தையும், வன்முறையின் உச்சத்தையுமே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாய் உள்ளது.
ஷோபாசக்தி தனது படைப்புகளில் கிறிஸ்தவத்தின் மீதான விமர்சனங்களை பல்வேறு நிலைகளிலும் முன் வைப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முதன்மையான பதிவாகும். புனைவில் கிறிஸ்தவத்தில் அதீத நம்பிக்கையுடைய ரொக்கிராஜ் பாரிஸ் சென்று அங்கு அந்தோணியாகப்பு தாசனாக அறிமுகமாகும் அவன் தன்னுடன் தங்கியிருந்த இந்து சமய நண்பர்களின் சுமார் 20 சாமி படங்களை தீயிலிட்டுக் கொளுத்துகிறான். அவை குறித்த உரையாடலில் “அனைத்து விக்கிரகங்களையும் தீயிலிடுமாறு வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதே என்றான். அத்துடன் தனது இந்த தேவ ஊழியத்திற்குப் பிரதிபலனாக கர்த்தர் தன் மேல் ஆசீரைப் பொழிந்து லண்டனில் கரை சேர்ப்பார்.” (கொரில்லா.பக் - 147) என்ற கூற்றும் நம்பிக்கையும் கிறிஸ்தவர்களின் மூடநம்பிக்கையினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு காலச்சுவடு பேட்டி ஒன்றில் யேசுராஜா ஞானஸ்னானம் குறித்து தனது தலைமையாசிரியருடன் ஆற்றிய எதிர்வினை பற்றிக் குறிப்பிடுவது மேற்சுட்டிய கருத்தினை வலுப்படுத்துவதாக அமைகின்றது. “ஞானோபதேசம் செய்த என்னுடைய தலைமையாசிரியர் ஞானஸ்னானம் செய்யாத யாரும் சொர்க்கத்திற்குப் போக முடியாது என்று சொன்னார். அப்போது எனக்குச் சந்தேகம் வந்தது. காந்தி அங்கு போவாரா என்று கேள்வி கேட்டேன். அப்போது அவர் சொன்னார் காந்தி ஞானஸ்னானம் பெறவில்லையாதலால் போக முடியாது. அப்போது நாங்கள் எப்படி அங்கே போகமுடியும் என்று கேள்வி எழுப்பினேன். இப்படி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டது சாத்தானின் தூண்டுதல் என்று சொன்னார். (சிரிப்பு) ஒரு அடக்குதல் தான் அங்கே நிகழ்ந்தது” (காலச்சுவடு,இதழ்– 46, பக்-12)
மேலும் கதைசொல்லி ஒரு சிகரெட் எடுத்து அந்தோணியிடம் புகைக்கக் கொடுத்த போது “அந்தோணி பொத்தென விழுந்து எழுந்து முழந்தாளில் நின்று கைகளை நீள விரித்து, அன்பும், கருணையும் காணாமல் போன ஆட்டுக் குட்டியைக் கண்டடைகின்றவருமான அப்பா, பிதாவே, உமக்கு ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்… சகல சாத்தான்களிடமிருந்தும், சாவான பாவத்திலிருந்தும் அஞ்ஞானம், மது, சூது போன்ற பொல்லாப்புகளிலிருந்தும் காத்து என்னை வழிநடத்துபவரே உமக்கு… ஸ்தோத்திரம் என ஒரு விதமான மணிபிரவாளத்தில் விடாமல் செபித்துக் கொண்டிருந்தான்.” (கொரில்லா.பக் - 147) என்பதும், இன்னொரு தருணத்தில் மாடியில் இருந்து நீர் ஒழுகுவது குறித்து பேசுகின்ற போது “கர்த்தர் ஜலப்பிரளயத்தை உண்டுபண்ணிவிட்டார்; நீங்கள் கர்த்தரிடம் மனம் திரும்பியே ஆக வேண்டும்”(கொரில்லா.பக் - 148) எனக்கூறுவதும், இன்னொரு நிலையில் “கர்த்தர் கொழும்பில் புறஜாதியினர் மத்தியில் அக்கினியை இறக்கி விட்டுள்ளார்.” (கொரில்லா.பக் - 149) என்பதுமான அந்தோணியின் கர்த்தர் பற்றியான கருத்தியல் முழக்கங்கள் மூலம் பைபிள் வசனங்களைக் கேலிக்குரிய தாக்கும் அவர் பைபிள் வசனங்களாலேயே வாழ்வை நிரப்பிக் கொண்டு தமது வாழ்வைத் தொலைத்துக் கொள்வதோடு பிறர் வாழ்வையும் தொலைத்து விட முயற்சிக்கும் சூழலை இங்கு பல நிலைகளில் அடையாளப் படுத்துகின்றார்.மேலும் கிறிஸ்தவத்தின் மூடநம்பிக்கை மற்றும் மதப் பரப்புரை சார்ந்த கருத்துருவாக்கத் தன்மையினையும் அடையாளப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி வாழ்வின் எல்லா நிலையினையும் மதங்களோடும், ஆன்மீகத்தோடும் இணைத்து தொடர்பு படுத்தி மனிதனை கேலிக்குரியதாக்கும் கருத்துருவாக்க முயற்சிக்கெதிரான ஒரு போராட்டமாகவே கருத இடமளிக்கின்றது. தமிழக மார்க்சிய பெரியாரிய சிந்தனையாளர்கள் முற்றிலும் இந்துமதம் சார்ந்தே தமது விமர்சனங்களை முன்வைக்கும் இத்தருணத்தில் அதற்கு வேறுபட்ட நிலையில் ஈழ – புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து கிறிஸ்தவத்தின் கருத்துருவாக்கத்திற்கு எதிராக எழுப்புகின்ற இவ்விமர்சனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றது.
‘கொரில்லா’ - வைப் பொறுத்தமட்டில் மாறுபட்ட சூழலில் நிகழ்ந்துள்ள புலப்பெயர்வுகள் குறித்துப் பேசினும் ரொக்கிராஜின் புலப்பெயர்வு என்பது தீவிரமான போர்ச்சூழலில் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர்களாலேயே விரட்டியடிக்கப்படுகின்ற ஒரு அவல நிலையை மையமாகக் கொண்டுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்ற நோக்கில் ஏற்படுகின்ற புலப்பெயர்வு ஒருபுறமிருக்க புகலிடத்து வேதனை என்பது இதைவிட கொடுமையானதாக இருப்பதை உணரமுடிகின்றது. குடியுரிமைபெறுதல், தங்கும் விடுதி பெறுதல், தொழில் அமைத்துக் கொள்ளுதல் தொடர்பான சிக்கல்கள் என எண்ணற்ற நிலைகளில் துயரங்கள் படர்வதை புனைவு அடையாளப்படுத்துகின்றது. புகலிடத்தில் நிகழ்ந்த லொக்காவின் படுகொலை, அதன் விசாரணை காலத்திலேயே நிகழ்ந்த இக்னொரு தமிழர் படுகொலை, நாவலில் இறுதியாக வருகின்ற சபாலிங்கத்தின் படுகொலை என்பன புகலிடத்தில் ஈழத்தமிழர்களிடையே தொடருகின்ற கருத்து முரண்பாட்டையும், வன்முறையினையும் பறைசாற்றுவதாக உள்ளது. “எமது தாய் நாட்டில் இருக்க முடியாத காரணத்தால்தான் நாம் அந்நிய நாட்டிற்கு வந்தோம். அந்நிய நாட்டில் கூட நம்மவர்கள் அவருடைய உயிரை அநியாயமாகப் பறித்து விட்டார்கள். நானும் பிள்ளையும் அவரை இழந்து தவிக்கின்றோம். இந்நிலை எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக் கூடாது.”(கொரில்லா.பக் - 178) என்ற சபாலிங்கத்தின் மனைவியின் கூற்று இங்கு முதன்மையான பதிவாக உள்ளது.
கொரில்லாவைப் போன்றே ‘ம்’ நாவலும் ஈழத்தையும் ஐரோப்பிய நாடுகளையும் ஒன்றிணைக்கும் புலப்பெயர்வு குறித்துப் பேசுகின்றது. ‘ம்’ பேசும் புலப்பெயர்வுத் தமிழ்ப் போராளி நேசகுமாரனை மையமாகக் கொண்டது. நேசகுமாரன் மூலமாக ஈழப்போரின் பல்வேறு நிலைத்தளங்களுக்கு நம்மை பயணிக்கச் செய்யும் ஷோபாசக்தி இலங்கை இராணுவம், தமிழ் விடுதலை இயக்கங்களின் அதிகாரங்களுக்கும், வன்முறைகளுக்கும் முகம் கொடுத்து ஈழத்தில் ஒரு தமிழன் வாழ்வதென்பது இயலாது என்பதைப் பல்வேறு நிலைக்களங்களில் எடுத்துரைத்துள்ளார். மேற்சுட்டிய நிலைகளில் ஷோபாசக்தி தமது புனைவுகள் மூலமாக ஈழ, புலம்பெயர் சூழலில் தமிழர்களின் நிஜம் சார்ந்த வாழ்வியலின் பன்முக நிலைப்பாட்டை முன்வைத்துள்ளமை தமிழ் இனத்தின் அவல நிலை குறித்து உலக சமூகத்திற்கு எடுத்துரைப்பதாக உள்ளது.
செல்வா...
ReplyDeleteஅருமை. வேகமாகப் பதிவிடத் தொடங்கிவிட்டீர்கள். நானும் ம் நாவலை வாசித்திருக்கிறேன். உங்களின் விமர்சனத்தின் வாயிலாக மீணடுமொருமுறை அதை நினைவுப்படுததிக்கொண்டேன். அருமை. தொடர்க. வாழ்த்துக்கள்.
Please remove the word verification.